ADDED : மே 30, 2024 11:25 PM
சென்னை:'தெற்கு ரயில்வேயில், காட்பாடி - அரக்கோணம்; சென்னை கடற்கரை - மேல்மருவத்துார், திருத்தணி - சென்ட்ரல், பித்ரகுண்டா - சென்ட்ரல் உட்பட பல்வேறு வழித்தடங்களில், 12க்கும் மேற்பட்ட, 'மெமு' எனப்படும், குறுகிய துார பயணியர் வகை ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ஒன்பது பெட்டிகளே இருக்கும், இந்த வகை ரயில்களில், காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. கதவுகள் சிறிதாக இருப்பதாலும், பயணியர் ஏறி, இறங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, 12 பெட்டிகளாக இணைத்து இயக்கும்படி, பயணியர் கோரிக்கை விடுத்தனர். பயணியரின் கோரிக்கையை பரிசீலித்த தெற்கு ரயில்வே, 12 பெட்டிகளாக மாற்ற முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
மொத்தம் உள்ள, 12 மெமு வகை ரயில்களையும், 12 பெட்டிகளாக மாற்ற உத்தரவிட்டுளோம். இவற்றில் போதிய அளவில் கழிப்பறை வசதி இருக்கும். அடுத்த சில மாதங்களில், படிப்படியாக அனைத்து மெமு ரயில்களும், 12 பெட்டிகளாக மாற்றியமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.