பண இரட்டிப்பு ஆசை காட்டி: கோவையில் ரூ.15 லட்சம் மோசடி
பண இரட்டிப்பு ஆசை காட்டி: கோவையில் ரூ.15 லட்சம் மோசடி
ADDED : செப் 19, 2011 07:46 PM
சூலூர் : சூலூரில் மருந்து வியாபாரியிடம், பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, 15.50 லட்ச ரூபாயை சுருட்டிச் சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை, சவுராஷ்டிரா டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் பிரதிவிராஜன், 30; மருந்து பொருட்கள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். கடந்த சில மாதங்களாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு, கடன் சுமை அதிகரித்தது; பணத்தை திரட்ட முயற்சி செய்தார். இந்நிலையில், சந்திரன் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அவரிடம் தன் கடன் சுமை குறித்தும், தொழிலை தொடர்ந்து நடத்த அதிகளவில் பணம் தேவைப்படுவது குறித்தும் பேசியுள்ளார். அவருக்கு ஆறுதல் கூறிய சந்திரன், தனக்கு தெரிந்த நபர், பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறினார். அவரிடம் நாம் பணத்தை கொடுத்து இரட்டிப்பாக்கி, கடன் பிரச்னையை தீர்த்துக் கொள்ளலாம் என கூறியுள்ளார். இதை நம்பி பிரதிவிராஜன், இரண்டு கார்களை விற்று, 15.50 லட்ச ரூபாயுடன் நேற்று, சூலூர் வந்தார். சந்திரனை தொடர்பு கொண்டபோது, கண்ணம்பாளையம் ரோட்டுக்கு வருமாறு கூறினார். அவருடன் வேறு ஒரு நபரும் இருந்தார்.அந்த நபரை அறிமுகப்படுத்தி வைத்த சந்திரன், பணத்தை அவரிடம் தருமாறு கூறினார். பணத்தை பெற்ற அந்த நபர், அங்கிருந்து சென்றார். சிறிது நேரம் கழித்து சந்திரனும், பணம் பெற்று சென்ற நபரை பார்த்து வருவதாக கூறி, அங்கிருந்து, 'எஸ்கேப்' ஆனார்.நீண்ட நேரம் ஆகியும் இருவரும் திரும்பவில்லை; அருகில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. அப்போது தான், தான் ஏமாற்றப்பட்டுள்ளோம் என உணர்ந்த பிரதிவிராஜன், சூலூர் போலீசில் புகார் செய்தார். மோசடியில் ஈடுபட்ட இரு நபர்களையும், போலீசார் தேடி வருகின்றனர்.