15 சதவீதம் பாரம்பரியமான ஓட்டு வங்கி இழப்பு கரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க., வீழ்ச்சி தொடக்கமா?
15 சதவீதம் பாரம்பரியமான ஓட்டு வங்கி இழப்பு கரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க., வீழ்ச்சி தொடக்கமா?
ADDED : ஜூன் 06, 2024 11:01 PM
கரூர்:கரூர் மாவட்ட அ.தி.மு.க., தொடர்ந்து தோல்வியடைவது மட்டுமின்றி, பாரம்பரியமான ஓட்டு வங்கியில் சராசரியாக, 15 சதவீதத்தை இழந்துள்ளது.
கரூர் மாவட்டம், அ.தி.மு.க., கோட்டையாக இருந்தது. 2011, 2016 தேர்தல்களில் மொத்தமுள்ள, 4 சட்டசபை தொகுதிகளில், மூன்றில் வென்றது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. அதன் ஓட்டு சதவீதம் கடும் சரிவை கண்டுள்ளது. 2006 சட்டசபை தேர்தலில், தி.மு.க., ஆட்சியை கைப்பற்றிய போது, கரூர் மாவட்டத்தில், 4 தொகுதிகளில், மூன்றில் அ.தி.மு.க., போட்டியிட்டு ஒன்றில் வென்று, 42.61 சதவீதம் ஓட்டுக்களை பெற்றது.
மூன்று தொகுதிகள் கரூர் லோக்சபாவிலும், பெரம்பலுார் லோக்சபாவில், குளித்தலை தொகுதி உள்ளது. அதன்படி, 2009ல் லோக்சபா தேர்தலில் மாவட்டத்தில், 4 தொகுதிகளில், 46.06 சதவீதம் ஓட்டுக்களில் வெற்றி பெற்றது. கரூர் லோக்சபாவில் அ.தி.மு.க., தம்பிதுரை வெற்றி பெற்றார். 2011 சட்டசபை தேர்தலில் மூன்று தொகுதிகளை வென்று, 54.50 சதவீதம் ஓட்டுக்களை வாங்கியது. 2014 லோக்சபா தேர்தலில், மாவட்டத்தில் உள்ள, 4 சட்டசபை தொகுதியில், 48.51 சதவீதம் ஓட்டுக்களை பெற்று, கரூர், பெரம்பலுார் லோக்சபா தொகுதிகளை கைப்பற்றியது. 2016 சட்டசபை தேர்தலில், மூன்று தொகுதிகளில் வென்று, 47.14 சதவீதம் ஓட்டுக்களை வென்றது.
அதன்பின், முதல்வர் ஜெயலலிதா மறைவு, செந்தில்பாலாஜி தி.மு.க.,வில் இணைந்ததால் கள நிலவரம் மாறியது. 2019 லோக்சபா தேர்தலில் மாவட்டத்தில் 4 சட்டசபை தொகுதியில், 24.77 சதவீதம் மட்டும் பெற்று, கரூர், பெரம்பலுார் தொகுதிகளில் தோல்வியை தழுவியது. 2021 சட்டசபை தேர்தலில், மாவட்டத்தில் மூன்று தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய போதும், பா.ஜ., உள்பட கூட்டணி பலத்தால் பாரம்பரியமான ஓட்டு வங்கியில் பெரிய இழப்பு இல்லாமல், 39.47 சதவீதம் பெற்றது. 2024 லோக்சபா தேர்தலில் கூட்டணி பலம் இல்லாமல் போட்டியிட்டதால், 32.52 சதவீதம் ஓட்டுக்களுடன் தோல்வியடைந்தது.
கடந்த, 2016 சட்டசபை தேர்தலுக்கு பின், கரூர் அ.தி.மு.க.,வில் தொடர்ச்சியாக ஓட்டு சதவீதம் குறைந்து வருகிறது. 2006 முதல், 2016 வரை வெற்றியோ, தோல்வியோ இருந்தாலும், 42 முதல், 55 சதவீதம் வரை ஓட்டுக்கள் குறையாமல் பெற்று வந்துள்ளது. கடந்த, மூன்று தேர்தலாக ஓட்டு சதவீதம் கடும் வீழ்ச்சியில் இருக்கிறது. தங்களின் பாரம்பரியமான ஓட்டு வங்கியில் சராசரியாக, 15 சதவீதத்துக்கு மேல் இழந்துள்ளது. இந்த ஓட்டுக்களை, பா.ஜ., நாம் தமிழர் கட்சிகள் பெற தொடங்கி விட்டன. இந்நிலை தொடர்ந்தால், கரூர் மாவட்டத்தில் மீண்டும் வெற்றி பெற முடியாத நிலைக்கு, அ.தி.மு.க., தள்ளப்படும் என, அக்கட்சினர் புலம்புகின்றனர்.