UPDATED : ஆக 05, 2024 12:00 AM
ADDED : ஆக 04, 2024 11:50 PM

தமிழக காவல் துறையில் பணிபுரியும், 16 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் நேற்று அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து, 46 நாட்களில்,
41 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பதவி மாறி உள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம், மாதவச்சேரி உள்ளிட்ட பகுதி களில், ஜூன் 19ல் கள்ளச்சாராயம் குடித்து, 225 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில், 64 பேர் பலியாகினர். இதற்கு கள்ளச்சாராயத்திற்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுப்பதில் காட்டிய அலட்சியமே காரணம் என்ற
குற்றச்சாட்டு எழுந்தது.காவல் துறையை தன் வசம் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என, எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்தன. நாளுக்கு நாள் உயிர் பலிகளும் அதிகரித்து வந்ததால் நிலைமை மோசமானது.
கூடுதல் பொறுப்பு
அப்போது, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.,யாக இருந்த மகேஷ்குமார் அகர்வால், எஸ்.பி., செந்தில்குமார் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். கள்ளக்குறிச்சி எஸ்.பி., சமயசிங் மீனாவும் மாற்றப்பட்டார்.
அத்துடன், சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.,யாக இருந்த அருணுக்கு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.
சென்னை கீழ்ப்பாக்கம் துணை கமிஷனராக இருந்த கோபி, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தையொட்டி துவங்கப்பட்ட ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் பணியிட மாற்ற விவகாரம் தற்போது வரை தொடர்கிறது.
இதற்கிடையில், சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டார். இது, காவல் துறை மீது மேலும் ஒரு புயலை கிளப்பியது. தேசிய கட்சியின் மாநில தலைவரின் உயிருக்கே பாதுகாப்பு இல்லை; தமிழகத்தில் கொலைகள் நடக்காத நாளே இல்லை என்ற நிலை உள்ளதாக குற்றச்சாட்டுகள் கிளம்பின.
கமிஷனர் மாற்றம்
இதனால், சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த, டி.ஜி.பி., சந்தீப் ராய் ரத்தோட் அதிரடியாக மாற்றப்பட்டார். புதிய போலீஸ் கமிஷனராக மாநில சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.,யாக இருந்த அருண் நியமிக்கப்பட்டார்.தலைமையிடத்து கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம், மாநில சட்டம் - ஒழுங்கு பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
![]() |
![]() |
நேற்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி., சைலேஷ்குமார் யாதவ், திருநெல்வேலி கமிஷனர் மூர்த்தி உட்பட, 16 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றப்பட்டனர்.
இப்படி மாநிலம் முழுதும், 46 நாட்களில், 41 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பதவி மாறி உள்ளனர். இதேபோல, ஒன்றரை மாதங்களில், 95 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும் அடுத்தடுத்து மாற்றப்
பட்டுள்ளனர். - நமது நிருபர் -