ADDED : மே 24, 2024 03:51 AM
விழுப்புரம்: முன்விரோத தகராறில், பெண்ணை மானபங்கப்படுத்திய விவசாயிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து, விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.
திண்டிவனம் அடுத்த கீழ்சிவிரி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன்,53; விவசாயி. இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த செல்லப்பன்,49; என்பவருக்கும் முன்விரோதம் உள்ளது. இதன் காரணமாக சீனிவாசன் கடந்த 2021ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி, செல்லப்பன் மனைவியை ஜாதி பெயரைக் கூறி திட்டி, மானபங்கப்படுத்தினார்.
இதுகுறித்து செல்லப்பன் அளித்த புகாரின் பேரில், சீனுவாசனை கைது செய்த பிரம்மதேசம் போலீசார், அவர் மீது விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் வன்கொடுமை பிரிவில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கியஜோதி, குற்றம் சாட்டப்பட்ட சீனிவாசனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.