கூட்டுறவு வங்கிகளின் நீண்ட கால நிலுவை கடன் ரூ.200 கோடி வசூல்
கூட்டுறவு வங்கிகளின் நீண்ட கால நிலுவை கடன் ரூ.200 கோடி வசூல்
ADDED : ஜூன் 30, 2024 01:06 AM
சென்னை:கூட்டுறவு வங்கிகளில், நீண்ட காலமாக வசூலாகாமல் நிலுவையில் உள்ள கடனை வசூலிக்கும் சிறப்பு திட்டத்தின் கீழ், 2 லட்சம் பேரிடம் இருந்து, 200 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு கடன் சங்கங்களில் பண்ணைசாரா பிரிவில், சிறு வணிக கடன், தொழிற்கடன், வீட்டு கடன், சுய உதவிக்குழு கடன்கள் வழங்கப்படுகின்றன.
இந்த பிரிவுகளில் கடன் வாங்கிய, 4 லட்சத்துக்கும் அதிகமானோர், பல ஆண்டுகளாக வட்டி மற்றும் அசலை செலுத்தவில்லை. அவர்களிடம் இருந்து, 1,500 கோடி ரூபாய் நிலுவை தொகை வர வேண்டியுள்ளது.
எனவே, நீண்ட காலமாக வசூலாகாமல் நிலுவையில் உள்ள கடனை வசூலிக்க சிறப்பு கடன் தீர்வு திட்டம், 2023 டிசம்பரில் துவக்கப்பட்டது. அத்திட்டத்தில், 2022 டிச., வரை நிலுவையில் உள்ள கடன்கள் மட்டுமே இடம் பெறும்.
கடன்தாரர்கள் செலுத்த வேண்டிய தொகைக்கு, கூடுதல் வட்டி, அபராத வட்டி, இதர கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது. இதுவரை, மொத்த நிலுவை கடனில், 2 லட்சம் பேரிடம் இருந்து, 200 கோடி ரூபாய் அளவிற்கு வசூலாகியுள்ளது.
இதுகுறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நிலுவை கடன் வைத்திருப்பவர்களின் சொத்து ஆவணங்கள், வங்கிகளில் உள்ளன. ஒருவர் கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டி, 16 சதவீதம்.
அந்த வட்டியை குறைப்பதுடன், கூடுதல் வட்டி, அபராத வட்டி, இதர கட்டணங்கள் என, முழுதும் தள்ளுபடி செய்யும் வகையில், சிறப்பு திட்டம் துவக்கப்பட்டது. இத்திட்டத்தில் நிலுவை கடனுக்கு, 9 சதவீதம் வட்டி மட்டும் வசூலிக்கப்படுகிறது.
சிறப்பு திட்டத்தில் பயன் பெறுமாறு, நிலுவை கடனை செலுத்தாமல் உள்ள, 4.73 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது.
கடன்தாரர்கள் முதலில், நிலுவை கடன் மற்றும், 9 சதவீத வட்டி சேர்த்து வரும் தொகையில், 25 சதவீதம் செலுத்த வேண்டும். மீதி தொகையை வரும் டிசம்பருக்குள் செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுவரை, 2 லட்சம் பேரிடம் இருந்து, 200 கோடி ரூபாய் வசூலாகி யுள்ளது. வரும் டிச., வரை அவகாசம் இருப்பதால், இன்னும் பலர் சிறப்பு திட்டத்தின் கீழ் பயன்பெறுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.