UPDATED : மே 10, 2024 04:31 AM
ADDED : மே 10, 2024 04:27 AM

சென்னை : தமிழக மின்தேவை தினமும் சராசரியாக, 15,000 மெகாவாட் என்றளவில் உள்ளது. இந்தாண்டு மார்ச் முதல் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. இதனால், 'ஏசி' உள்ளிட்ட மின் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்ததால், மின்தேவை 18,000 மெகாவாட்டை தாண்டியது.
இம்மாதம் 2ம் தேதி மாலை 3:30 மணிக்கு, எப்போதும் இல்லாத வகையில் 20,830 மெகா வாட்டாக அதிகரித்தது. இதுவே, இதுவரை உச்ச அளவாக உள்ளது.
தொடர்ந்து அதிகரித்த மின்தேவையால், டிரான்ஸ்பார்மர் உள்ளிட்ட சாதனங்களில், 'ஓவர் லோடு' காரணமாக பழுது ஏற்பட்டது. இதனால், பல இடங்களில் இரவில் மின்தடையால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், சென்னை உட்பட பல மாவட்டங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல், அதிகாலை வரை மழை பெய்தது. இதனால், நேற்று முன்தினம் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்தது.
இதையடுத்து, கடந்த சில தினங்களாக தினமும் 19,500 மெகா வாட்டாக இருந்த மின் தேவை, நேற்று முன்தினம் 1,500 - 2,000 மெகா வாட் வரை குறைந்து, 18,000 - 17,500 மெகா வாட்டாக இருந்தது.
இதுமேலும் குறைய, கோடை மழை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்குமா என்ற எதிர்பார்ப்பு மின் வாரியத்திடம் எழுந்துள்ளது.