ADDED : ஜூலை 14, 2024 12:54 AM

சென்னை: பதிவுத்துறையில் இதுவரை இல்லாத அளவாக, கடந்த 12ம் தேதி ஒரே நாளில், 224 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, பதிவுத்துறை செய்திக்குறிப்பு:
கடந்த 12ம் தேதி தான் ஆனி மாதத்தின் கடைசி முகூர்த்த நாள். அதன்பின், ஆடி மாதம் பிறந்து விடுவதால் பத்திரப்பதிவுகள் இருக்காது. எனவே, 12ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று, அதிகளவில் சொத்து ஆவணங்கள் பதியப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படியே, 20,310 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு, இதுவரை இல்லாத அளவாக, ஒரே நாளில், 224.26 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. வழக்கமான நாளில், ஆவணங்களை பதிவு செய்ய, ஒரு சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு தினமும், 100 பேர் மட்டுமே வரும் வகையில், 'டோக்கன்'கள் வழங்கப்படும். இந்த டோக்கன்களை, துறையின் இணையதளத்தில் முன்பதிவு செய்து பெற வேண்டும்.
சிறப்பு நிகழ்வாக, 12ம் தேதிக்கு மட்டும், ஒரு சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு, 150 டோக்கன்களாக உயர்த்தி வழங்கப்பட்டது. அதனால், பொது மக்கள் எந்த சிரமமும் இல்லாமல், ஆவணப்பதிவு மேற்கொள்ள வசதி செய்யப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.