ADDED : ஏப் 17, 2024 12:37 AM

நம் நாளிதழின் மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகளை இன்றுடன், தேர்தல் களம் இணைப்பில் வெளியிட்டு முடிக்கிறோம். இந்த முடிவுகள் ஒவ்வொரு தரப்பிலும் பல விமர்சனங்களை கிளப்பியுள்ளன. அவற்றில், மனதில் நின்ற விமர்சனம், 'எதற்காக தேவையில்லாமல் கருத்துக்கணிப்பு எல்லாம்' என்று ஒரு வாசகர் கேட்டது தான்.
பத்திரிகையாளராக, கள நிலவரம் பற்றிய கருத்துக்களை உருவாக்கிக்கொள்ள, அரசியல்வாதிகள், அதிகாரிகள், வாக்காளர்கள், நிருபர்கள் என, பல தரப்பு மக்களிடமும் பேசுகிறோம். அதோடு, பிரசாரங்களை பார்க்கிறோம், ஊடகங்களில் வெளியாகும் செய்திகளையும், விமர்சனங்களையும் படிக்கிறோம். இவற்றின் அடிப்படையில், உருவாகும் பார்வையில் தான் செய்திகளை பார்க்க முடிகிறது.
இவ்வளவு தகவல்களும் புத்தியில் கூச்சலை ஏற்படுத்தி விடுகின்றன. அதனால், ஒரு சில நேரங்களில், பார்க்க வேண்டிய அம்சங்கள் கண்பார்வையை விட்டு விலகி விடுகின்றன. அதற்காகத்தான் கள நிலவரத்தை பார்ப்பதற்கு மற்றொரு கருவியாக கருத்துக்கணிப்பை பயன்படுத்துகிறோம்.
ஒவ்வொரு வாக்காளரின் மனதிலும், 'நாம் விரும்பும் கட்சி வேட்பாளர் வெல்ல வேண்டும்' என்ற ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். பத்திரிகையாளர்களும் வாக்காளர்கள் தான். அவர்கள் மனதிலும் எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால், அதன் அடிப்படையில் மட்டும் செய்திகளையும் தகவல்களையும் கொண்டு சேர்க்க முடியாது.
இவ்வளவு அரசியல் நகர்வுகளுக்கு பின், களத்தில் நிலவரம் இவ்வாறு இருக்கிறது, என்று கருத்துக்கணிப்பு சொல்கிறது. அதில் வரும் முடிவு பிடிக்கவில்லை என்றால், பெரும்திரளாக ஓட்டுச்சாவடிக்கு சென்று மாற்றி அமைக்கும் சக்தி வாக்காளர்களிடம் உள்ளது.
ஒவ்வொரு தொகுதியிலும் சராசரியாக 70 சதவீதம் பேர் தான் ஓட்டளிக்கின்றனர். வெற்றி- - தோல்விக்கான விகிதங்கள் மற்ற தேர்தல்களைவிட இந்த தேர்தலில் குறைவு தான். சில தொகுதிகளில், வெற்றிபெறும் வேட்பாளர், 35 சதவீதத்திற்கு மேல் எடுக்கமாட்டார் என்ற நிலை தான் உள்ளது. இந்த சூழலில், கூடுதலாக 5 சதவீதம் பேராவது ஓட்டளித்தால் என்னாகும்?
இதுவரை, கருத்துக்கணிப்பு முடிவுகளை ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியே வெளியிட்டு இருந்தோம். மொத்தமாக மாநிலம் முழுதும் என்ன நிலவரம்?
அனைவரும் எதிர்பார்த்தது போல், அ.தி.மு.க., - -பா.ஜ., பிளவால் தி.மு.க.,விற்கு தான் லாபம்
பா.ஜ., கூட்டணிக்கு 13 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருக்கிறது. அதில், மூன்று தொகுதிகளில் பாதுகாப்பான முன்னிலை உள்ளது. மற்ற தொகுதிகளில் களப்பணிக்கு ஏற்ப கரைசேர வாய்ப்பு இருக்கிறது
பா.ஜ., கூட்டணியின் வாக்கு விகிதம் 25 சதவீதத்தை தாண்டி, அது தமிழகத்தில் முக்கிய கட்சியாக உருவெடுக்கிறது
தனக்கு வளர்ந்து வரும் ஆதரவை ஓட்டாக மாற்ற, பா.ஜ.,விடம் கட்சி கட்டமைப்பு இல்லை
வேட்பாளர் அல்லது வேறு காரணங்களால், எதிர்க்கட்சிகள் மீது திருப்தி இல்லாத இடங்களில், நாம் தமிழர் கட்சி வளர்கிறது
அ.தி.மு.க.,விற்கு ஓட்டு விகிதம் குறைகிறது
தே.மு.தி.க., மற்றும் எஸ்.டி.பி.ஐ., சேர்க்கையால் அ.தி.மு.க.,விற்கு எந்த லாபமும் இல்லை
மக்கள் நீதி மய்யம் ஓட்டு தி.மு.க., கூட்டணிக்கு போகவில்லை
தி.மு.க.,விற்கு கூட்டணி பலம், பண பலம், ஆட்சி பலம் என, மூன்றும் சாதகமாக உள்ளன. அதே நேரம், களத்திலும் போட்டிபோட்டு தி.மு.க.,வினர் பணியாற்றுகின்றனர்.
தொகுதிவாரியாக...
அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் -தென் சென்னை, சேலம் மற்றும் ஈரோடு
பா.ஜ., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் - வேலுார், தர்மபுரி, நாமக்கல், திருப்பூர், கோவை, கரூர், பெரம்பலுார், சிவகங்கை, மதுரை, தேனி, ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி
தி.மு.க., கூட்டணிக்கு மற்ற 23 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு இருக்கிறது.
ஒவ்வொரு அணியும் சராசரியாக பெறக்கூடிய ஓட்டு விகிதங்கள் வரைபடமாக சேர்க்கப்பட்டுள்ளன.
இறுதியில், இவை கணிப்புகள் தான், 6 கோடி வாக்காளர்களில், 88,000 வாக்காளர்களின் கருத்து தான் என்பதை, வாசகர்கள் மனதில் கொள்ள வேண்டும்.
