பாகிஸ்தானுக்கு சீனா அனுப்பிய 2.5 டன் ரசாயனம் சிக்கியது
பாகிஸ்தானுக்கு சீனா அனுப்பிய 2.5 டன் ரசாயனம் சிக்கியது
UPDATED : ஜூலை 12, 2024 06:22 AM
ADDED : ஜூலை 11, 2024 11:31 PM

சென்னை: சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு கப்பலில் அனுப்பப்பட்ட, 2 டன் அபாயகரமான ரசாயன பொருளை, சென்னை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
சீனாவில் உள்ள ஷாங்காய் துறைமுகத்தில் இருந்து, ஏப்ரல், 18ல் சரக்கு கப்பல் ஒன்று பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்திற்கு சென்றது. அந்தக் கப்பல், திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு, மே, 8ல் வந்தது.
வெளிநாடுகளில் இருந்து வரும் கப்பல்கள், இந்திய கடல் எல்லைக்குள் வரும்போது, அதிலுள்ள பொருட்கள் குறித்து, சுங்கத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால், சீனாவில் இருந்து வந்த கப்பல், எந்த தகவலும் தெரிவிக்காமல் துறைமுகத்திற்கு வந்துள்ளது.
இதுகுறித்து, கப்பல் நிர்வாகமும் முறையான விளக்கம் தராததால், சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, கப்பலில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில், 103 பேரல்களில் 2,560 கிலோ அபாயகர ரசாயனங்கள் இருப்பது தெரியவந்தது.
இது, கண்ணீர் புகை குண்டுகள் தயாரிப்பதில் முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப் படுவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். அதை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், இந்திய கடல் வழியாகக் கொண்டு செல்லப் படுவதற்கான காரணம், பயங்கரவாத பின்னணி உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.