ரோஜா முத்தையா நுாலக இணையதளத்தில் பெரியாறு அணையின் 26,000 ஆவணங்கள்
ரோஜா முத்தையா நுாலக இணையதளத்தில் பெரியாறு அணையின் 26,000 ஆவணங்கள்
ADDED : மே 05, 2024 12:43 AM

சென்னை: பெரியாறு அணை தொடர்பான 26,000 ஆவணங்கள், ரோஜா முத்தையா நுாலகத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.
பெரியாறு அணை கட்டுமானம் தொடர்பான நாவலை, வார இதழ் ஒன்றில், கவிஞர் அ.வெண்ணிலா எழுதினார்.
டிஜிட்டல் வடிவில்
அதற்காக லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நுாலகம், டில்லி தேசிய ஆவண காப்பகம், கேரள நுாலகங்கள் மற்றும் ஆவண காப்பகம், தமிழக ஆவண காப்பகம் உள்ளிட்டவற்றில் தகவல்களை சேகரித்தார்.
அவர் தமிழக ஆவண காப்பகத்தில் மட்டும், 26,000த்துக்கும் மேற்பட்ட பக்கங்கள் உடைய, 1800 முதல் 1917ம் ஆண்டு வரையிலான பெரியாறு அணை கட்டுமானம் தொடர்பான பல்வேறு ஆவணங்களை சேகரித்தார்.
அவற்றை, தமிழ் இணைய கல்விக்கழகம் வாங்கி, டிஜிட்டல் வடிவில் மாற்றி சேகரித்தது. அவற்றில் சில ஆவணங்களை, தன் இணையதள பக்கத்தில் பதிவேற்றியது.
இதையடுத்து, டிஜிட்டல் வடிவில் உள்ள அனைத்து ஆவணங்களையும், வெண்ணிலா தமிழக அரசிடம் ஒப்படைத்தார். தற்போது, சென்னை தரமணியில் உள்ள ரோஜா முத்தையா நுாலகம் அவற்றை வாங்கி, தன் இணையதளத்தில் அவற்றை பதிவேற்றம் செய்துள்ளது.
அவற்றை, ஆய்வாளர்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்யவும் அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து கவிஞர் அ.வெண்ணிலா கூறியதாவது:
பிரிட்டிஷ் அரசு, ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்ட வறட்சியை போக்க திட்டமிட்டது முதல், அதன் பொறியாளர் பென்னிகுயிக், பிரிட்டிஷ் அரசு, திருவிதாங்கூர் சமஸ்தானம், ராமநாதபுரம் அரசு உள்ளிட்டோருக்கு தன் கைப்பட எழுதிய கடிதங்கள், அவற்றால் ஏற்பட்ட விளைவுகள், அரசாணைகள், திட்ட மதிப்பீடு, நிதி ஒதுக்கீடு, அணையின் வரைபடம், பணிகள் துவக்கம், இடர்பாடுகள், செலவுகள், தாது ஆண்டு பஞ்சம் என, பல்வேறு ஆவணங்களை நேரில் ஆய்வு செய்தேன்.
காப்புரிமை
பெரியாறு அணை குறித்து, 1,537 அரசாணைகள் வெளியிடப்பட்டிருந்தன. காப்புரிமை பிரச்னை இல்லாத, தமிழக அரசு ஆவண காப்பகத்தில் இருந்து திரட்டிய ஆவணங்களை மட்டும் அரசிடம் ஒப்படைத்தேன்.
அவற்றை ஆய்வாளர்கள் பயன்படுத்தும் வகையில், ரோஜா முத்தையா நுாலகம் தன் இணையதளத்தின், http://rmrldl.in/periyar/ என்ற பக்கத்தில் பதிவேற்றி உள்ளது.
இவ்வாறு கூறினார்.