UPDATED : ஜூலை 11, 2024 09:31 AM
ADDED : ஜூலை 11, 2024 08:56 AM

திருச்சி: திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை முதன்மை கோட்ட ஆணையர் அபிஷேக், உதவி கோட்ட ஆணையர் பிரமோத், ஆய்வாளர் செபாஸ்டின் தலைமையிலான போலீசார், திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நேற்று காலையில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில், சென்னையில் இருந்து திருச்சி வந்த பயணியரில் ஒருவர், 'மாஸ்க்' அணிந்து, சந்தேகப்படும்படி இருந்ததால், ஆர்.பி.எப்., போலீசார் அவரை விசாரித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த லட்சுமணன், 34, என்ற அந்த பயணியின் பையை, போலீசார் சோதனை செய்தனர். அதில், 1.89 கோடி ரூபாய் மதிப்பில், 2.800 கிலோ தங்க நகைகள் மற்றும், 15 லட்சம் ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை மதுரைக்கு கொண்டு செல்வதாக, அந்த நபர் தெரிவித்தார். தொடர்ந்து, வணிக வரித் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அந்த நபரிடம் இருந்த ஆவணங்களை சரி பார்த்த போது, அவை போலியானவை என தெரிந்தது. அதனால், நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்து, வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்த போலீசார், லட்சுமணனை கைது செய்தனர்.
மேலும், அந்த நகை, பணம் யாருடையது எனவும், எதற்காக திருச்சி எடுத்து வந்தார் என்பது குறித்தும் விசாரிக்கின்றனர்.