கள்ளச்சாராயத்தில் 29.7% மெத்தனால் கலப்பு: ஐகோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்
கள்ளச்சாராயத்தில் 29.7% மெத்தனால் கலப்பு: ஐகோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்
UPDATED : ஜூலை 03, 2024 02:37 PM
ADDED : ஜூலை 03, 2024 02:19 PM

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்தில் 8.6% முதல் 29.7% மெத்தனால் கலந்துள்ளது என சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்ட 229 பேர், சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில், 150 பேர் குணமடைந்தனர். 65 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இது தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிந்து சாராய வியாபாரி, மெத்தனால் சப்ளையர்கள் என, 21 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பாக, தமிழக அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்தில் 8.6% முதல் 29.7% மெத்தனால் கலந்துள்ளது என சென்னை ஐகோர்ட்டில் இன்று (ஜூலை 03) தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
அறிக்கையில் தமிழக அரசு கூறியிருப்பதாவது: கள்ளச்சாராயத்தை ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 132 சாட்சிகளிடம் விசாரணை நடந்துள்ளது. சி.பி.சி.ஐ.டி.,யின் 6 குழுக்கள், உள்ளூர் போலீஸ் 3 குழுக்கள் விசாரித்து வருகிறது. தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட்டு வரும் மெத்தனால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சட்டசபையில் அ.தி.மு.க., கொடுத்த கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீசில் குறிப்பிட்ட எந்த தகவல்களும் இல்லை.
சி.பி.ஐ., விசாரணை அவசியமில்லை
மரக்காணம் சம்பவத்தின் தொடர்ச்சி என சொல்ல முடியாது. மரக்காணம், செங்கல்பட்டு சம்பவத்தில் கள்ளச்சாராயத்தில் 99% மெத்தனால் கலந்தது கண்டறியப்பட்டது. சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற அவசியம் இல்லை.
விசாரணையில் முன்னேற்றம் இல்லாத வழக்குகளை மட்டுமே சி.பி.ஐ.,க்கு மாற்ற முடியும். கள்ளச்சாராய வழக்கில் விசாரணை சரியான முறையில் விரைவாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு தமிழக அரசு கூறியுள்ளது.