மதுக்கடைகளுக்கு 3 நாள் முழு விடுமுறை 'டாஸ்மாக்' ஊழியர்கள் கோரிக்கை
மதுக்கடைகளுக்கு 3 நாள் முழு விடுமுறை 'டாஸ்மாக்' ஊழியர்கள் கோரிக்கை
ADDED : மார் 28, 2024 12:53 AM
சென்னை:தமிழக அரசின், 'டாஸ்மாக்' நிறுவனம், சில்லரை கடைகள் வாயிலாக மது வகைகளை விற்பனை செய்கிறது. அந்த கடைகளுக்கு, ஆண்டுக்கு எட்டு நாட்கள் மட்டும் விடுமுறை.
தமிழகத்தில், லோக்சபா தேர்தல் ஏப்., 19ல் நடக்கிறது. அம்மாதம், 17ம் தேதி மாலை உடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது.
அன்று மாலை, 6:00 மணியுடன் மதுக்கடைகளை மூட வேண்டும். அதன்பிறகு, 18 மற்றும் 19ம் தேதிகளிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், 17ம் தேதியும் முழு விடுமுறை விட உத்தரவிடுமாறு உள்துறை செயலருக்கு, டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, உள்துறை செயலருக்கு, கூட்டு நடவடிக்கைக் குழுவினர் அனுப்பிய கடித விபரம்:
தேர்தலுக்காக ஏப்., 17ம் தேதி மாலை, 6:00 மணிக்கு மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவு வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் தெரியவருகிறது.
இவ்வாறு மூடப்படும் போது, மதுக்கடைகளில் கூட்டம் அளவுக்கு அதிகமாக கூடும். ஊழியர்களின் பாதுகாப்புக்கு கேள்விக்குறியாக உள்ளது.
மேலும், கடைகளை மூடியபின், கணக்கு பார்க்க இயலாத நிலை ஏற்படும். இதனால், 17ம் தேதி அன்று முழு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும்.
அதேபோல், டாஸ்மாக் ஊழியர்கள் ஓட்டளித்து விட்டு, 19ம் தேதி, மாலை, 6:00 மணிக்கு மேல் கடைகளை திறக்க இயலாத நிலை ஏற்படும்.
இதனால், 19ம் தேதியும் முழு விடுமுறை அறிவிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.