ADDED : மே 03, 2024 01:36 AM
சென்னை:தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமியின் அறிக்கை:
தமிழகம் முழுதும் தங்கு தடையின்றி, 24 மணி நேர மும்முனை மின்சாரத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை, விவசாய சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இதற்காக கடந்த 2021ம் ஆண்டு, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. தமிழக மின்சார ஒழுங்கு முறை ஆணையமும், அதற்கான உத்தரவை பிறப்பித்தது.
இதுவரை அந்த உத்தரவை, தமிழக மின்சார வாரியம் அமல்படுத்தவில்லை. இரவு நேரத்தில், 10:00 முதல் காலை 6:00 மணி வரை தொடர்ந்து எட்டு மணி நேரம், கிராம பகுதிகளில் விவசாயிகளுக்கு வழங்கி வந்த மும்முனை மின்சாரம், தேர்தலுக்கு முன், 5 மணி நேரமாக குறைக்கப்பட்டது.
தேர்தலுக்கு பின் இது, 3 மணி நேரமாக குறைக்கப்பட்டு உள்ளது.
இதனால், கடுமையான வறட்சி காலத்தில் பாசனம் செய்ய முடியாமல், மகசூல் இழப்பை விவசாயிகள் எதிர்கொண்டுள்ளனர்.
நகர பகுதிகளில் மின் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்கு கிராமங்களையும், விவசாயிகளையும் வஞ்சிக்கின்றனர்.
இப்பிரச்னையில் மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.