'300 ச.மீ., வீடு + கடைக்கு கட்டட நிறைவு சான்று வேண்டாம்': மின்வாரியம் உத்தரவு
'300 ச.மீ., வீடு + கடைக்கு கட்டட நிறைவு சான்று வேண்டாம்': மின்வாரியம் உத்தரவு
ADDED : ஆக 09, 2024 01:22 AM

சென்னை: 'வணிகப் பிரிவில், 300 சதுர மீட்டருக்கு உட்பட்ட கட்டடத்தில், வீடு மற்றும் வணிக நிறுவனம் இணைந்து இருந்தாலும், புதிய மின் இணைப்பு வழங்க கட்டட பணி நிறைவு சான்று கேட்கக்கூடாது' என, பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டு உள்ளது.
கட்டடங்கள் கட்டும்போது, ஒருங்கிணைந்த வளர்ச்சி விதிகளின்படி அரசு அனுமதி அளிக்கிறது. கட்டடம் கட்டிய பின், உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து பணி நிறைவு சான்று பெற்று சமர்ப்பித்தால் தான் மின்சாரம், குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்.
குடியிருப்பு திட்டப்பிரிவில், எட்டு வீடுகள் அல்லது 750 சதுர மீட்டருக்குள் கட்டும் கட்டடங்களுக்கு புதிய மின் இணைப்பு வழங்குவதற்கு, பணி நிறைவு சான்று பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
வணிகப் பிரிவில், 300 சதுர மீட்டர் வரையும், 14 மீட்டர் உயரம் மிகாமலும் கட்டடப்படும் கட்டடங்களுக்கு மின் இணைப்பு வழங்க, பணி நிறைவு சான்று பெறுவதில் இருந்து, ஜூனில் விலக்கு அளிக்கப்பட்டது. பல இடங்களில் ஒரே கட்டடத்தில் தரைதளத்தில் கடை, மேல்தளத்தில் வீடு கட்டும்போது, கட்டட நிறைவு சான்று கேட்பதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, வீடு, வணிகப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சதுர மீட்டருக்குள் வீடு, கடைகள் இணைந்திருந்தாலும், கட்டட நிறைவு சான்று கேட்கக்கூடாது என, பொறியாளர்களுக்கு, மின்வாரியம் உத்தரவிட்டு உள்ளது.