ADDED : ஜூலை 29, 2024 12:22 AM

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 3100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. தப்பிஓடிய டிரைவரை போலீசார் தேடுகின்றனர்.
பரமக்குடி ஓட்டப்பாலம் அருகே நேற்று முன்தினம் இரவு குடிமைப்பொருள் வட்ட வழங்கல் தாசில்தார் கீதா தலைமையிலான அலுவலர்கள் வாகன சோதனையிட்டனர். அப்போது சரக்கு வாகனத்தை நிறுத்தியபோது டிரைவர் தப்பி ஓடினார். அதில் 62 மூடைகளில் தலா 50 கிலோ எடை வீதம் 3100 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டறியப்பட்டது.
அவற்றை பறிமுதல் செய்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. வாகனம் குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது. டிரைவரை தேடும் போலீசார் யாருக்காக, எங்கிருந்து, எங்கு ரேஷன் அரிசி கடத்தப்பட்டது என விசாரிக்கின்றனர். நயினார்கோவில், பரமக்குடியில் கடந்த மாதம் ரேஷன் அரிசி, மண்ணெண்ணெய் கடத்திய ரேஷன் ஊழியர்கள் சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

