ADDED : செப் 17, 2011 10:58 PM
சின்னாளபட்டி: தமிழக வாக்காளரின் இடது கை சுட்டு விரல், மீண்டும் மை வைத்துக்கொள்ள ஆயத்தமாகி வருகிறது.
அரசியல்வாதிகள் பதவி என்ற கிரீடம் சூட்டிக்கொண்டு 'மக்கள் சேவை' ஆற்ற, களம் இறங்க உள்ளனர். இச்சூழலில், உள்ளாட்சி தேர்தலுக்கு அடிப்படையான 'பஞ்சாயத்து ராஜ்' சட்டம் உருவான விதத்தை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். புது பஞ்சாயத்து அரசாங்க அமைப்பை நிறுவ ஏதுவாக 64 வது அரசியல் சாசன சட்ட திருத்த மசோதாவை, 1989 ல், முன்னாள் பிரதமர் ராஜிவ் அறிமுகம் செய்தார். இதில், உள்ளாட்சி அமைப்புகளை கண்காணிக்கும், கலைக்கும் அதிகாரம் கவர்னருக்கு வழங்கப்பட்டிருந்தது. மத்திய அரசிற்கும், பஞ்சாயத்து அமைப்புகளுக்கும் நேரடி தொடர்பு ஏற்படுத்தப்பட்டது.
அம்சங்கள்: மாநில அரசு பட்டியலில் இருந்து பஞ்சாயத்து அமைப்புகளை நீக்குவது; பஞ்சாயத்து அரசாங்க நிதியை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பது; தனியாக ஒரு நிதி ஆணையத்தை உருவாக்கி மத்திய அரசே நேரடியாக நிதி வழங்குவது; பஞ்சாயத்துக்கு தேர்தல் நடத்தும் பொறுப்பை மாநில அரசிடம் இருந்து பறித்து, மத்திய தேர்தல் ஆணையத்திடம் வழங்குவது; அனைத்து நிலைகளிலும் ஒரே மாதிரியான இட ஒதுக்கீடு ஆகியவை, இம்மசோதாவின் பிரதான அம்சங்கள்.
தோல்வி: மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் விதத்தில் இருப்பதாக, பெரும்பாலான மாநில முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 'பஞ்சாயத்து அமைப்புக்கு மசோதா கொண்டு வரும் அதிகாரம், மத்திய அரசுக்கு இல்லை,' என்ற வாதமும் எழுந்தது. இறுதியில் இம்மசோதா தோல்வியை தழுவியது. கடந்த 1990 ல், தேசிய முன்னணி அரசு, 74 வது சட்டதிருத்த மசோதாவை அறிமுகப்படுத்தியது. இது விவாதத்திற்கு எடுக்கப்படாத நிலையில், அரசு கவிழ்ந்தது. மீண்டும் காங்., ஆட்சிக்கு வந்ததும், 64 வது சட்ட திருத்த மசோதா, பார்லி., இணைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. அக்குழுவின் பரிந்துரைப்படி, திருத்தங்கள் செய்யப்பட்டு,1992 டிசம்பரில், 73 வது சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, ஒவ்வொரு மாநிலத்திற்கும், தனியான பஞ்சாயத்து ராஜ் சட்டம் நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது. மத்திய அரசின் தொடர் நிர்ப்பந்தத்தால், தமிழக சட்டசபையில், 1994 ஏப்., 19 ல், பஞ்சாயத்து சட்ட முன்வரைவு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் உருவான கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி என்ற மூன்றடுக்கு முறை தான், தற்போது அமலில் உள்ளது.