"மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி": ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி
"மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி": ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி
ADDED : ஜூலை 02, 2024 02:13 PM

சென்னை: 'இரண்டாம் கட்டமாக கட்டப்பட்டு வரும் மெட்ரோ ரயில் நிலையங்கள் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்படும்' என சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள வசதி ஏற்படுத்த அரசுக்கு உத்தரவிடக்கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று(ஜூலை 02) விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் யோகேஷ்வரன், ‛‛ மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள வசதிகளை ஏற்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும். சக்கர நாற்காலிகள் இருந்தும் மாற்றுத்திறனாளிகளால் ரயில் நிலையத்தை பயன்படுத்த முடிவதில்லை'' என வாதிட்டார்.
அரசு தரப்பு வாதம்
அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ் ராமன், தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. ஏற்கனவே உள்ள ரயில் நிலையங்களில் ரயில் பெட்டிகள் மற்றும் நடைமேடைகளுக்கு இடையேயான இடைவெளியை குறைக்க மாற்றம் செய்தால் ஒட்டுமொத்த கட்டுமானமும் பாதிக்கப்படும்.
இரண்டாம் கட்டமாக கட்டப்பட்டு வரும் மெட்ரோ ரயில் நிலையங்கள் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்படும் என உறுதி அளித்தார். இது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய, ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.