ADDED : செப் 08, 2024 07:50 AM
தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் அரசு விரைவு பஸ்களில் பயணிக்க ஒரே நாளில், 35,140 பேர் முன்பதிவு செய்ததால் புது சாதனை படைக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை அக்., 31ல் கொண்டாடப்பட உள்ளது. இதனால் தமிழகத்தில், அரசு விரைவு பஸ்களில், பயண நாளில் இருந்து, 60 நாட்களுக்கு முன் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என, அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்தது.
அதன்படி ஆக., 31ல் முன்பதிவு தொடங்கியது. ஒரு வாரத்தில், 70,000 டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கடந்த, 4ல் மட்டும், 35,140 பேர் முன்பதிவு செய்தனர்.
இது விரைவு பஸ் வரலாற்றில் புதிய சாதனை. இதற்கு முன், 2018 ஜன., 12ல் பொங்கல் பண்டிகையையொட்டி, 32,910 பேர் முன்பதிவு செய்ததே, ஒரு நாள் முன்பதிவு சாதனையாக இருந்தது. தற்போது இச்சாதனை முறியடிக்கப்பட்டதாக, விரைவு பஸ் போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- நமது நிருபர் -