மத்திய வழித்தடத்தில் காற்றாலைகளை இணைக்க ஒரு மெகா வாட்டிற்கு ரூ.50 லட்சம் கட்டணம்
மத்திய வழித்தடத்தில் காற்றாலைகளை இணைக்க ஒரு மெகா வாட்டிற்கு ரூ.50 லட்சம் கட்டணம்
ADDED : ஆக 11, 2024 04:55 AM

சென்னை: தமிழகத்தில் காற்றாலை அமைத்து, மத்திய மின் தொடரமைப்பு நிறுவனத்தின் வழித்தடத்தில் இணைப்பதற்கு, ஒரு மெகா வாட்டிற்கு, 50 லட்சம் ரூபாய் கட்டணம் நிர்ணயித்து, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு, தொழில் துறையினரிடம் எதிர்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில், தனியார் நிறுவனங்கள் காற்றாலை மின் நிலையம் அமைக்கின்றன. பல நிறுவனங்கள் காற்றாலைகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, சொந்த தேவைக்கு பயன்படுத்துகின்றன. சில நிறுவனங்கள் மின் வாரியத்திற்கு விற்கின்றன. இந்நிறுவனங்கள், மின் வாரியத்தின் வழித்தடத்தை பயன்படுத்த, 'வீலிங் சார்ஜ், டிரான்ஸ்மிஷன் சார்ஜ்' உள்ளிட்ட கட்டணங்களை செலுத்துகின்றன.
இது தவிர, சில நிறுவனங்கள், தமிழகத்தில் காற்றாலை மின் நிலையம் அமைத்து, மத்திய அரசின், 'பவர்கிரிட்' நிறுவனம், மத்திய மின் தொடரமைப்பு நிறுவன துணை மின் நிலையங்களில் வழங்குகின்றன. இந்த மின்சாரம், மத்திய வழித்தடம் வாயிலாக, பிற மாநிலங்களுக்கு எடுத்து செல்லப்படுகிறது. அதன்படி தமிழகத்தில், 1,800 மெகா வாட் திறனில் உள்ள காற்றாலைகள், மத்திய வழித்தடத்தில் இணைக்கப்பட்டு உள்ளன. மத்திய வழித்தடங்களில் மின்சாரத்தை வழங்கும் காற்றாலைகளுக்கு, மின் வாரியம் கட்டணம் வசூலிப்பதில்லை.
இந்நிலையில், இனி தமிழகத்தில் காற்றாலை அமைத்து, மத்திய மின் வழித்தடத்தில் இணைக்கப்படும் மின்சாரத்திற்கு, 'ரிசோர்ஸ் சார்ஜ்' என்ற பெயரில், ஒரு மெகா வாட்டிற்கு, 50 லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்க, மின் வாரியத்தின் துணை நிறுவனமான தமிழக பசுமை எரிசக்தி கழகம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கு, தொழில் துறையினரிடம் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து, காற்றாலை முதலீட்டாளர்கள் கூறியதாவது: குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில், காற்றாலை மின் நிலையம் அமைப்பதை ஊக்குவிக்க, அரசு நிலத்தை கையகப்படுத்தி குத்தகைக்கு வழங்குகின்றன. ஆனால், தமிழகத்தில் தனியாரிடம் விலை கொடுத்து நிலம் வாங்கி, மின் நிலையம் அமைக்கப்படுகிறது.
அந்த மின்சாரத்தை மத்திய வழித்தடத்தில் இணைப்பதால், மின் வாரியத்திற்கு எந்த செலவும் இல்லை. இதற்கு எதற்கு ஒரு மெகா வாட்டிற்கு, 50 லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்க வேண்டும்? இந்த விவகாரம் தொடர்பாக, சட்ட வல்லுனர்களிடம் ஆலோசித்து, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.