ADDED : மே 16, 2024 02:49 AM
சென்னை:தமிழக மின் வாரியம், 2022 - 23ம் நிதியாண்டில், 51,460 கோடி ரூபாய்க்கு, 7,482 கோடி யூனிட்கள் மின்சாரம் கொள்முதல் செய்துள்ளது.
அதில், மத்திய அரசின் மின் நிலையங்களில் இருந்து, 19,432 கோடி ரூபாய்க்கும்; மின் வாரியத்திற்கு மட்டும் மின்சாரம் வழங்க ஒப்பந்தம் செய்துள்ள தனியார் நிறுவனங்களிடம் இருந்து, 1,905 கோடி ரூபாய்க்கும் மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது.
காற்றாலை, சூரியசக்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க மின் நிலையங்களில் இருந்து, 4,281 கோடி ரூபாய்க்கும்; குறுகிய கால மற்றும் மின்சார சந்தைகளில் இருந்து, 17,754 கோடி ரூபாய்க்கும் மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது. மீதி, வழித்தட கட்டணமாக செலவிடப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டில், 8,791 கோடி யூனிட்கள் மின்சாரம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதில், வாகன தயாரிப்பு உள்ளிட்ட பெரிய தொழிற்சாலைகளை உள்ளடக்கிய உயரழுத்த பிரிவுக்கு, 2,148 கோடி யூனிட் மின்சாரம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக மின் வாரியத்திற்கு, 21,621 கோடி ரூபாய்க்கு வருவாய் கிடைத்துள்ளது.
வீடு, கடைகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த பிரிவில், 6,643 கோடி யூனிட் மின்சாரம் விற்பனையால், 39,244 கோடி ரூபாய்க்கு வருவாய் கிடைத்துள்ளது.