வெளிமாநில தொழிலாளர்களுக்கு 60,386 வீடுகள் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் விறுவிறு
வெளிமாநில தொழிலாளர்களுக்கு 60,386 வீடுகள் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் விறுவிறு
ADDED : மே 10, 2024 10:15 PM
சென்னை:சென்னையில் வெளிமாநில தொழிலாளர்களுக்காக, 60,386 வீடுகள் அடங்கிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை, தனியார் பங்கேற்புடன் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் துவக்கி உள்ளது.
நாடு முழுதும் இடம் பெயரும், வெளிமாநில தொழிலாளர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. கட்டுமான பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக தொழிலாளர்கள் இடம் பெயர்கின்றனர்.
சர்ச்சையானது
இவ்வாறு இடம் பெயரும் தொழிலாளர்களுக்கு, முறையான இருப்பிட வசதி கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. குறிப்பாக கொரோனா காலத்தில், முறையான இருப்பிட வசதி இல்லாததால் இவர்கள் பாதிக்கப்பட்டது பெரும் சர்ச்சையானது.
இந்நிலையில், இடம் பெயரும் வெளிமாநில தொழிலாளர்களுக்கான குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை, மத்திய அரசு அறிவித்தது. இதன்படி, ஒவ்வொரு மாநில அரசும், குறிப்பிட்ட எண்ணிக்கையில். வெளிமாநில தொழிலாளர்களுக்கான வீடுகளை கட்ட வேண்டும்.
தனியார் நிறுவனங்களின் பங்கேற்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் இத்திட்டத்துக்கான செயலாக்க அமைப்பாக, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மத்திய அரசின் அறிவுறுத்தல் அடிப்படையில், வெளிமாநில தொழிலாளர்களுக்கான வீடுகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தனியார் பங்கேற்புடன், 123.24 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 60,386 வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக, தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனமான சிப்காட், எஸ்.பி.ஆர்., கட்டுமான நிறுவனம், டாடா மின்னணு நிறுவனம் ஆகியவற்றின் வாயிலாக, 74.01 கோடி ரூபாயில், 36,189 வீடுகள் கட்டப்படுகின்றன.
வாடகைக்கு மட்டுமே
சென்னை, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரங்களில் இந்த வீடுகள் கட்டப்படுகின்றன.
சென்னை பெட்ரோலியம் நிறுவனம், எஸ்.பி.ஆர்., கட்டுமான நிறுவனம், ஆகியவற்றின் சார்பில், சென்னை மற்றும் ஸ்ரீபெரும்புதுாரில், 49.23 கோடி ரூபாயில், 24,197 வீடுகள் கட்டும் பணிகள் துவக்கப்பட உள்ளன.
இவை வாடகை அடிப்படையில் மட்டுமே, வெளிமாநில தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்படும். இந்த வீடுகளை தனியார் நிறுவனங்கள் குத்தகை அடிப்படையில் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.