ரூபாய் 3.99 கோடி சிக்கிய விவகாரம்: விசாரணை வளையத்தில் பா.ஜ., நிர்வாகி
ரூபாய் 3.99 கோடி சிக்கிய விவகாரம்: விசாரணை வளையத்தில் பா.ஜ., நிர்வாகி
ADDED : மே 06, 2024 12:41 AM

சென்னை: தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட, 3.99 கோடி ரூபாய் விவகாரம் தொடர்பாக, பா.ஜ., நிர்வாகி கோவர்தனன், விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், ஏப்., 6ல், தேர்தல் பறக்கும் படையினர், 3.99 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக, சென்னையை சேர்ந்த நவீன், சதீஷ்; துாத்துக் குடியை சேர்ந்த பெருமாள் ஆகியோரிடம் விசாரித்தனர். அந்த பணம், திருநெல்வேலி தொகுதி பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக, தாம்பரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். பின், இந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணைக்கு மாற்றப் பட்டது.
அவர்கள், சதீஷ், நவீன், பெருமாள், நயினார் நாகேந்திரன் உறவினர் பெருமாள் மற்றும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் உள்ளிட்டோரிடம் விசாரித்து வாக்குமூலம் பெற்றனர்.
அதன் அடிப்படையில், சென்னை நீலாங்கரையை சேர்ந்த, பா.ஜ., தொழில்துறை பிரிவு மாநில துணை தலைவர் கோவர்தனனை, விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.
சென்னை பசுமை வழிச்சாலையில், பா.ஜ., தொழில்துறை பிரிவு மாநில துணை தலைவர் கோவர்தன் நடத்தி வரும் ஹோட்டலில் இருந்து தான், பணம் கைமாற்றப்பட்டதும், நயினார் நாகேந்திரனுக்காக, வாக்காளர்ளுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்க திட்டமிட்டதும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட எட்டு பேருக்கு, 'சம்மன்' அனுப்ப சி.பி.சி.ஐ.டி., போலீசார் முடிவு செய்துள்ளனர்.
முதற்கட்டமாக, கோவர்தனனிடம் விசாரிக்க, அவரது வீட்டிற்கு போலீசார் சென்றனர். உடல் நலக்குறைவால் படுத்த படுக்கையாக உள்ளதால், ஓரிரு நாட்கள் கழித்து, அவரிடம் விசாரிக்க உள்ளனர். கோவர்தனன் அளிக்கும் வாக்குமூலம் அடிப்படையில், நயினார் நாகேந்திரனிடம் விசாரணை நடத்த இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.