ADDED : ஜூலை 04, 2024 10:30 PM
சென்னை: வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் அறிக்கை:
தமிழகத்தில் 12 கூட்டுறவு, இரண்டு பொதுத்துறை, 16 தனியார் என, மொத்தம் 30 சர்க்கரை ஆலைகள் இயங்கி வருகின்றன.
இந்த சர்க்கரை ஆலைகள், 2023 - 24ம் ஆண்டு அரவை பருவத்தில், கடந்த மாதம் 15ம் தேதி வரை, 30.82 லட்சம் டன் கரும்பை அரவை செய்து, 2.75 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்துஉள்ளன. உற்பத்தி செய்யப்படும் சர்க்கரையை விற்று, கரும்புக்கான பணம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
நடப்பு பருவத்திற்கு வழங்கப்பட வேண்டிய 920.99 கோடி ரூபாயில், ஜூன் 15 வரை 835.73 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் விவசாயிகளுக்கு, 85.26 கோடி ரூபாய் வழங்க வேண்டி உள்ளது.
இதை வழங்கவும், ஆலைகளின் நடைமுறை மூலதன செலவிற்காகவும், 94.49 கோடி ரூபாய் கடன் அனுமதித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.