ADDED : ஆக 05, 2024 01:20 AM

திருநெல்வேலி,:திருநெல்வேலி மாநகராட்சி மேயராக இருந்த தி.மு.க., கவுன்சிலர் சரவணன் மீது, அக்கட்சியின் பெரும்பான்மை கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்ததால் பதவியை ராஜினாமா செய்தார். புதிய மேயரை தேர்வு செய்ய இன்று தேர்தல் நடக்கிறது. மொத்தமுள்ள 55 கவுன்சிலர்களில் நான்கு அ.தி.மு.க., கவுன்சிலர்களை தவிர மற்றவர்கள் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர்.
இருப்பினும், தி.மு.க.,வில் போட்டி ஏற்படக்கூடாது என்பதற்காக நேற்று வண்ணார்பேட்டையில் அமைச்சர்கள் நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர் தி.மு.க., கவுன்சிலர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். மாவட்ட செயலர் மைதீன்கான், எம்.எல்.ஏ., அப்துல் வகாப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது நேரு, ஒரு கவரை கவுன்சிலர்கள் முன்னிலையில் பிரித்தார். மேலும் அவர், 'இக்கடிதத்தை தலைமை எங்களுக்கு தந்துள்ளது; நானே இன்னும் பார்க்கவில்லை' என்றார். கவரில் தி.மு.க., மேயராக, 25வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் பெயர்குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த கவர், அப்துல் வகாப் வாயிலாக கவுன்சிலர்கள் ஒவ்வொருவரிடமும் காண்பிக்கப்பட்டது. இதையடுத்து, மேயர் வேட்பாளராக கிட்டு அறிவிக்கப்பட்டார். இன்று காலை 10:30 மணிக்கு அவர் மேயர் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்வார். யாரும் போட்டியிடாத பட்சத்தில், அவர் மேயராக அறிவிக்கப்படுவார். இந்த தேர்தலை கமிஷனர் சுகபுத்ரா நடத்துகிறார்.
கிட்டு தற்போது மூன்றாவது முறையாக கவுன்சிலராக உள்ளார். இவர், எட்டாம் வகுப்பு படித்துள்ளார். வார்டில் தினமும் சைக்கிளிலேயே வலம் வந்து மக்கள் குறைகளை கேட்பவர்.
மேயர் பதவி, பட்டியல் இனத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இரு தேர்தல்களை தவிர, சைவ வேளாளர் சமூகத்தவர்களே அதிக முறை மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே, ஏ.எல்.சுப்பிரமணியன், விஜிலா சத்யானந்த், புவனேஸ்வரி, சரவணன் ஆகியோர் வேளாளர் சமூகத்தினர். கிட்டு, கார்காத்தார் பிரிவு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.