கோவையில் மீண்டும் ஓட்டுப்பதிவு: அனுமதி கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு
கோவையில் மீண்டும் ஓட்டுப்பதிவு: அனுமதி கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு
ADDED : ஏப் 28, 2024 01:37 AM

சென்னை: கோவை லோக்சபா தொகுதியில், நீக்கப்பட்ட வாக்காளர்களை பட்டியலில் சேர்த்து, ஓட்டுப்பதிவு செய்ய அனுமதிக்கவும், அதுவரை தேர்தல் முடிவை வெளியிட தடை விதிக்கவும் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கோவை நஞ்சுண்டபுரத்தைச் சேர்ந்த சுதந்திர கண்ணன் என்பவர் தாக்கல் செய்த மனு:
ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணியாற்றுகிறேன். லோக்சபா தேர்தலில் என் ஓட்டை பதிவு செய்ய, கடந்த 13ம் தேதி இந்தியா வந்தேன். ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் என் பெயர், மனைவி பெயர் இருந்தது.
புகார் அனுப்பினேன்
இந்த லோக்சபா தேர்தலுக்காக தயாரான வாக்காளர் பட்டியலில், என் பெயரும், மனைவி பெயரும் நீக்கப்பட்டிருந்தது. ஆனால், என் மகள் பெயர் இடம் பெற்றுள்ளது. கோவைக்கு, 15ம் தேதி வந்ததும், தேர்தல் ஆணையத்துக்கு புகார் அனுப்பினேன்.
எங்கள் பகுதியில் வசிக்கும் பலரது பெயர்கள், வாக்காளர் பட்டியலில் விடுபட்டிருந்ததும் தெரிய வந்தது. எங்கள் மீது எந்த தவறும் இல்லை.
தேர்தல் நாளில் ஓட்டுப்பதிவுக்கு சென்றவர்களில், ஆயிரக்கணக்கானோர் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை.
கடந்த 2019, 2021 தேர்தலின் போது, எங்கள் பெயர்கள் இருந்தன. 2024 தேர்தலுக்கு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில்தான், எங்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதனால், ஓட்டுரிமையை நாங்கள் இழந்துஉள்ளோம்.
தடை வேண்டும்
ஓட்டு எண்ணிக்கை, ஜூன் 4ல் நடக்க உள்ளது. எனவே, வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டவர்களை சேர்த்து, ஓட்டுப்பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும். இதுகுறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவரை நீக்குவதற்கு முன், சம்பந்தப் பட்டவருக்கு உரிய சந்தர்ப்பம் வழங்கி, முழுமையான விசாரணை நடத்தப் பட்டிருக்க வேண்டும். அவ்வாறு எந்த விசாரணையையும் அதிகாரிகள் நடத்தவில்லை.
நான் அனுப்பிய புகார், தேர்தல் ஆணையத்திடம் நிலுவையில் உள்ளது. நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் சேர்த்து, ஓட்டுப்பதிவு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். அதுவரை, கோவை தொகுதிக்கான தேர்தல் முடிவை அறிவிக்க தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

