'ஒரு குடும்பத்தின் சமையலுக்கான எரிபொருள் செலவு ரூ.5 மட்டுமே
'ஒரு குடும்பத்தின் சமையலுக்கான எரிபொருள் செலவு ரூ.5 மட்டுமே
ADDED : செப் 11, 2024 05:24 AM

புதுடில்லி: 'உஜ்வாலா' திட்டத்தின் கீழ், சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தும் குடும்பங்களின் ஒரு நாள் எரிபொருள் செலவு, 5 ரூபாயாகவும்; உஜ்வாலா திட்ட பயனாளிகள் அல்லாத குடும்பங்களுக்கு செலவு, 12 ரூபாயாகவும் உள்ளதாக, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
விறகு மற்றும் நிலக்கரியைப் பயன்படுத்தி சமைப்பதால் ஏற்படும் தீமைகளை கட்டுப்படுத்தும் விதமாக, கடந்த 2016ம் ஆண்டு உஜ்வாலா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இத்திட்டத்தின் இரண்டாவது கட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், விளிம்பு நிலையில் உள்ள குடும்பங்களுக்கு, 500 ரூபாய்க்கு சிலிண்டர் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் இதுதொடர்பாக, தன் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளதாவது:
சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தி சமைக்கும் குடும்பங்களின் எரிபொருள் செலவு குறித்து சமீபத்தில் கணக்கிடப்பட்டது. அப்போது, உஜ்வாலா பயனாளிகளின் குடும்பத்துக்கு ஒரு நாள் செலவு, 5 ரூபாய்க்கு சற்று அதிகமாகவும்; மற்றவர்களுக்கு, 12 ரூபாயாகவும் இருப்பது தெரியவந்தது.
கடந்த 2014ம் ஆண்டு, நாட்டில், 14 கோடியாக இருந்த சமையல் எரிவாயு இணைப்புகளின் எண்ணிக்கை, நடப்பாண்டு 33 கோடியாக அதிகரித்துள்ளது. இதற்கு உஜ்வாலா திட்டம் ஒரு முக்கிய காரணமாகும்.
இவ்வாறு தெரிவித்தார்.

