டிரைவர் இருக்கைக்கு மேல் மின்விசிறி வெயிலுக்கு இதமாக பஸ்களில் வசதி
டிரைவர் இருக்கைக்கு மேல் மின்விசிறி வெயிலுக்கு இதமாக பஸ்களில் வசதி
ADDED : மே 13, 2024 05:25 AM

சென்னை : வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், மாநகர பஸ்களில், ஓட்டுனரின் இருக்கைக்கு மேல்பகுதியில், மின்விசிறி பொருத்தப்பட்டு வருகிறது.
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், தினமும், 3,200 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில், மூன்று லட்சம் பேர் பயணம் செய்கின்றனர்.
தற்போது வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால், காற்றோட்டம் இன்றி ஓட்டுனர்கள் சிரமப்படுகின்றனர்.
இன்ஜின் வெப்பமும் தாக்குவதால், உடல் நலக்குறைவும் ஏற்படுகிறது. அதனால், மாநகர பஸ்களில், ஓட்டுனர்களின் இருக்கைக்கு மேலே மின்விசிறி பொருத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
பணியாளர்கள் நலன் சார்ந்து, பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். பணிமனை மற்றும் முக்கிய பஸ் நிலையங்களில் பணிபுரிவோருக்கு, மோர் வழங்கப்படுகிறது. அதேபோல, பயணியர் பாதுகாப்புக்கு, சிக்னல்களில் மாநகராட்சியுடன் இணைந்து பந்தல் அமைத்தும் வருகிறோம்.
வெயில் தாக்கம் அதிகம் இருப்பதால், முதற்கட்டமாக, 500 பஸ்களில், ஓட்டுனர் இருக்கைக்கு மேலே மின் விசிறி பொருத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, எல்லா பஸ்களிலும் இந்த வசதி செய்யப்படும். புதிதாக வாங்கப்பட்ட பஸ்களில் ஏற்கனவே இந்த வசதி உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.