எவ்வளவு சொன்னாலும் திருந்த மாட்டீங்களா; கேரளாவில் இருந்து திருநெல்வேலிக்கு மருத்துவக்கழிவுடன் வந்த லாரி பறிமுதல்!
எவ்வளவு சொன்னாலும் திருந்த மாட்டீங்களா; கேரளாவில் இருந்து திருநெல்வேலிக்கு மருத்துவக்கழிவுடன் வந்த லாரி பறிமுதல்!
ADDED : டிச 21, 2024 02:13 PM

திருநெல்வேலி: கேரளாவிலிருந்து திருநெல்வேலிக்கு மருத்துவக் கழிவுகள் கொண்டுவந்த லாரி சி.சி., டி.வி., காட்சிகள் அடிப்படையில் பறிமுதல் செய்யப்பட்டது. சேலத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர், டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளாவில் இருந்து திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் லாரி லாரியாக இறைச்சி கழிவுகள், மருத்துவக் கழிவுகள் குப்பைகளை மூட்டைகளில் கொண்டு வந்து கொட்டுகின்றனர். நாகர்கோவில் வழியாக வரும் மூட்டைகளை திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம், பணகுடி, நாங்குநேரி வட்டாரங்களில் கொட்டினர்.தென்காசி வழியே வரும் லாரிகளில் மருத்துவக் கழிவுகளை கடையம், ஆலங்குளம் வட்டாரங்களில் கொட்டினர்.
திருநெல்வேலி சீதபற்பநல்லூர் அருகே நடுக்கல்லூர், பழவூர் பகுதியில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் ககேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவக் கழிவுகள் மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டு உள்ளன என குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் எச்சரித்து இருந்தார்.
கடந்த டிசம்பர் 19ம் தேதி, திருநெல்வேலியில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை மீண்டும் கேரளாவுக்கே கொண்டு செல்ல வேண்டும். கேரளா அரசே பொறுப்பேற்று 3 நாட்களுக்குள் அகற்ற வேண்டும்' என தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதனால் கேரளாவில் இருந்து மருத்துவக்கழிவுகளை லாரியில் கொண்டு வந்து கொட்டப்படும் சம்பவம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், இன்று (டிச.,21) கேரளாவிலிருந்து திருநெல்வேலிக்கு மருத்துவக் கழிவுகள் கொண்டுவந்த லாரி சி.சி., டி.வி., காட்சிகள் அடிப்படையில் பறிமுதல் செய்யப்பட்டது. சேலத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர், டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.