கிணற்றில் விழுந்த குட்டியை அலேக்காக மீட்டது தாய் யானை
கிணற்றில் விழுந்த குட்டியை அலேக்காக மீட்டது தாய் யானை
ADDED : ஜூலை 11, 2024 12:52 AM

கொச்சி, கேரள மாநிலம், எர்ணாகுளம் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமத்தில், கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையை, தாய் யானையே மீட்ட சம்பவம் ஊர் மக்களை நெகிழ்ச்சி அடையச் செய்தது.
கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள மலையத்துார் என்ற இடத்தில் இல்லித்தோடு கிராமம் உள்ளது. இங்கு தனியாருக்கு சொந்தமான இடத்தில் உள்ள கிணற்றில், குட்டி யானை ஒன்று தவறி விழுந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸ் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து குட்டி யானையை மீட்க தயாராகினர். அப்போது அதன் தாய் யானை அங்கு வந்தது. குட்டியை கிணற்றில் கண்டதும் பதறிய தாய் யானை, அதை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டது.
இதைக் கண்ட வனத்துறையினர் சற்று பின்வாங்கி நின்று வேடிக்கை பார்த்தனர். தன் துதிக்கையால் குட்டி யானையை கிணற்றில் இருந்து அலேக்காக துாக்கிய தாய் யானை கண்ணீர் மல்க, துதிக்கையால் அதை குட்டியை தடவிக் கொடுத்தது.
இந்த காட்சி, கிராம மக்களை மட்டுமின்றி போலீசாரையும் நெகிழச் செய்தது. குட்டியை மீட்ட மகிழ்ச்சியில் அதை அழைத்துக் கொண்டு வனப்பகுதிக்குள் தாய் யானை சந்தோஷ நடை போட்டுச் சென்றது.
இதற்கிடையில், இங்கு தொடர்ந்து வரும் காட்டு யானைகளின் அச்சுறுத்தலை கட்டுப்படுத்த வனத்துறையினர் தவறிவிட்டனர். யானைகளின் அட்டகாசம் அதிகமாக இருப்பதாகவும், பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

