சென்னை விமான நிலையத்திற்கு துப்பாக்கி குண்டுடன் வந்த பயணி
சென்னை விமான நிலையத்திற்கு துப்பாக்கி குண்டுடன் வந்த பயணி
ADDED : ஆக 16, 2024 02:34 AM
சென்னை:சென்னையில் இருந்து டில்லி செல்லும் 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' பயணியர் விமானம், நேற்று காலை 6:00 மணிக்கு, புறப்பட தயாராக இருந்தது.
அதில் பயணம் செய்யும் பயணியரின் உடைமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். ஒரு பயணியின் பையை, 'ஸ்கேன்' செய்தபோது, வெடிகுண்டுகள் உள்ளதற்கான எச்சரிக்கை அலாரம் ஒலித்தது.
இதையடுத்து, அப்பையை சோதனை செய்ததில் சிறிய 'கேஸ்' ஒன்றில் 8 எம்.எம்., காலி துப்பாக்கி குண்டுகள் இருந்தது கண்டறியப்பட்டது.
விசாரணையில் அவர், உ.பி.,யைச் சேர்ந்தவர் என்பதும், சென்னையில் படிக்கும் மகனை பார்க்க ரயிலில் வந்ததும் தெரிந்தது. மேலும், ராணுவ வீரரான அவரது அண்ணனின் பையை எடுத்து வந்ததாகவும், அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து, அவரது பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், சென்னை விமான நிலைய போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர்; அவர்கள், மேற்கொண்டு விசாரிக்கின்றனர்.
இந்த சம்பவத்தால், இண்டிகோ விமானம் 30 நிமிடங்கள் தாமதாக புறப்பட்டது.