கமிஷனர் பெயரில் இருந்த பைக்கை பயன்படுத்திய பலாத்கார குற்றவாளி
கமிஷனர் பெயரில் இருந்த பைக்கை பயன்படுத்திய பலாத்கார குற்றவாளி
ADDED : ஆக 28, 2024 06:20 AM

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில், பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி சஞ்சய் ராய், கோல்கட்டா போலீஸ் கமிஷனர் பெயரில் பதிவு செய்யப்பட்ட இருசக்கர வாகனத்தை பயன்படுத்தியது தெரிய வந்தது.
மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில், முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த, 31 வயதான பயிற்சி பெண் டாக்டரை, ஆக., 9ல், பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில், போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். இவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கை, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். முதலில் குற்றத்தை ஒப்புக் கொண்ட சஞ்சய் ராய், உண்மை கண்டறியும் சோதனையின் போது, 'நான் ஒரு நிரபராதி' என, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார்.
இந்நிலையில், சம்பவம் நடந்த நாளில், சஞ்சய் ராய் பயன்படுத்திய இருசக்கர வாகனம், கோல்கட்டா போலீஸ் கமிஷனர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பது, தற்போது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:
ஆக., 9 அதிகாலை, 'போலீஸ்' என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு, கோல்கட்டாவின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் உள்ள சிவப்பு விளக்கு பகுதிகளுக்கு சஞ்சய் ராய் சென்று வந்துள்ளார்.
பின், அளவுக்கு அதிகமாக மது அருந்திய அவர், மருத்துவமனைக்கு வந்து, பயிற்சி பெண் டாக்டரை கொடூரமாக பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். இந்த இருசக்கர வாகனத்தை சி.பி.ஐ., பறிமுதல் செய்துள்ளது. தன்னை ஒரு போலீஸ் ஆகவே கருதி, பல்வேறு முறைகேடுகளில் சஞ்சய் ராய் ஈடுபட்டு வந்துள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
இந்த விவகாரம் குறித்து, கோல்கட்டா காவல் துறை வெளியிட்ட பதிவில், 'கோல்கட்டா போலீஸ் கமிஷனர் பெயரில் பதிவு செய்யப்பட்ட, சஞ்சய் ராய் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, சி.பி.ஐ.,யிடம் ஒப்படைத்ததே நாங்கள்தான்.
'இது குறித்து சமூக வலைதளங்களில் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். கோல்கட்டா காவல் துறையின் பல்வேறு துறைகளின் பணிகளுக்காக வாங்கப்படும் அனைத்து வாகனங்களும் அதிகாரப்பூர்வமாக கமிஷனரின் பெயரில் பதிவு செய்யப்படுவதே வழக்கம்' என, விளக்கம் அளிக்கப்பட்டது.

