மீண்டும் பயன்படும் ராக்கெட் 24ல் விண்ணில் பாய்கிறது
மீண்டும் பயன்படும் ராக்கெட் 24ல் விண்ணில் பாய்கிறது
ADDED : ஆக 22, 2024 06:41 AM

சென்னை: தமிழகத்தை சேர்ந்த, 'ஸ்டார்ட் அப்' நிறுவனமான, 'ஸ்பேஸ் ஜோன் இந்தியா' நிறுவனமும், மார்ட்டின் குழுமமும் இணைந்து, 'மிஷன் ரூமி 2024' என்ற பெயரில், மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டை உருவாக்கியுள்ளன.
சோதனை முயற்சிக்கான இந்த ராக்கெட், மாமல்லபுரம் அருகில் வரும், 24ம் தேதி காலை வானில், 80கி.மீ., துாரம் ஏவப்படுகிறது. பின், ராக்கெட்டின் சில பாகங்கள் தவிர, முக்கிய பாகம், 'பாராசூட்' வாயிலாக மீண்டும் பூமிக்கு திரும்பும். இதுகுறித்து, மார்ட்டின் குழும நிர்வாக இயக்குனர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கூறியதாவது:
சிறந்த எதிர்காலத்திற்கு பங்களிக்கும் புதிய முயற்சியில் கவனம் செலுத்தி வருகிறோம். எங்கள் குழுமத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ராக்கெட் அறிவியல், விண்வெளி தொழில்நுட்பத்தில் மாணவர்களை ஊக்குவிக்க உள்ளோம். இதற்காக, மீண்டும் பயன்படுத்தும் ராக்கெட் திட்டத்திற்கு, 4 கோடி ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
'இஸ்ரோ' முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கூறுகையில், ''அதிநவீன தொழில்நுட்பம் வாயிலாக, ஸ்பேஸ் ஜோன் இந்தியா நிறுவனம், ராக்கெட் ஏவுவதை புரட்சிகரமாக மாற்ற தயாராக உள்ளது.
உலகளவில் செயற்கைக்கோளின் சந்தை மதிப்பு, 500 பில்லியன் டாலராக உள்ளது. அதில், இந்தியாவின் பங்கு, 3 சதவீதம். இது, 2030ல் 10 சதவீதமாக உயரும். இதற்கு தனியார் பங்களிப்பு முக்கிய பங்கு வகிக்கும்,'' என்றார்.
இதுகுறித்து, ஸ்பேஸ் ஜோன் இந்தியா நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆனந்த் மேகலிங்கம் கூறியதாவது: விண்வெளி கண்டுபிடிப்புகளில், உலகளாவிய தலைமை இடத்திற்கு, இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. இதற்கு, நிலையான மற்றும் செலவு குறைந்த தீர்வுகளின் தேவை மிகவும் அவசியம்.
அதன்படி, மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டால், ஒரே ராக்கெட்டை பயன்படுத்தி, பல முறை செயற்கைக்கோளை ஏவலாம். இதனால் செலவு மிச்சமாகும். அதை மனதில் வைத்து, மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில், 'மிஷன் ரூமி 2024' ராக்கெட் உருவாக்கப்பட்டு உள்ளது.
இதை, கேளம்பாக்கத்தில் உள்ள எங்கள் நிறுவனத்தில் உருவாக்கியுள்ளோம். மொத்தம், 60 - 80 கிலோ எடையில் சோதனை ராக்கெட்டில், 'நைட்ரஸ் ஆக்சைடு' உள்ளிட்ட எரிபொருள்கள் நிரப்பப்பட்டுள்ளன.
ராக்கெட்டின் உயரம், 3.50 மீட்டர். இது, பூமியில் இருந்து வானில், 80 கி.மீ., துாரம் உயரே பறக்கக்கூடிய திறன் உடையது. இது, மூன்று சோதனை செயற்கைக்கோளை சுமந்தபடி, மாமல்லபுரம் அருகில் வானில் ஏவப்படும். இந்த செயற்கைக்கோள்கள், புறஊதா கதிர் வீச்சு, காமா கதிர் வீச்சு, காற்றின் தரம், ராக்கெட் செல்லும்போது ஏற்படும் அதிர்வு உள்ளிட்ட தகவல்களை சேகரிக்க உதவும்.
பூமியில் இருந்து திட்டமிடப்பட்ட துாரம் சென்ற பின், செயற்கைக்கோள் இருந்த பகுதி தவிர, மற்ற ராக்கெட் பாகங்கள், 'பாராசூட்' உதவியுடன் மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில் கடலில் விழும். அதை எடுத்து, சிறிய மாற்றங்கள் செய்து, மீண்டும் பயன்படுத்தலாம். இதனால் செலவு குறையும். இதுவே, இந்தியாவின் முதல், மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் என்ற சிறப்பை பெறும். இவ்வாறு அவர் கூறினார்.