மக்களை அச்சுறுத்திய புலி வனத்துறை கூண்டில் சிக்கியது
மக்களை அச்சுறுத்திய புலி வனத்துறை கூண்டில் சிக்கியது
ADDED : ஜூன் 25, 2024 01:42 AM

பந்தலுார்: நீலகிரி மாவட்டம், பந்தலுார் எல்லை அருகே தமிழகம் - கேரளா எல்லையில் வயநாடு மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள கேணிச்சரா என்ற இடத்தில், வர்கீஸ் மற்றும் பென்னி என்பவரின் வளர்ப்பு மாடுகள் மற்றும் ஆடுகளை வேட்டையாடிய புலி, ஒரு வாரமாக மக்களையும் அச்சுறுத்தி வந்தது.
புலியை பிடிக்க வேண்டி பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். தொடர்ந்து, வனத்துறை சார்பில், நேற்று முன்தினம் இரவு மாட்டு தொழுவம் ஒன்றில் இரண்டு கூண்டுகள் வைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டது. இரவு, 9:00 மணிக்கு வனத்துறையினர் வைத்த கூண்டில் புலி சிக்கியது.
வனத்துறையினர் கூறுகையில், 'இங்கு பிடிபட்டது, 10 வயதான ஆண் புலி. இதன் கால்களில் காயம் உள்ளதால் முதல் கட்டமாக வயநாடு வனவிலங்குகள் மீட்பு மையத்தில் சிகிச்சை அளிக்கப்படும். அதன் பின், புலியை வனத்தில் விடுவது பற்றி முடிவு செய்யப்படும்' என்றனர்.