ADDED : மார் 02, 2025 02:54 AM

மதுராந்தகம் : சென்னை அண்ணா பல்கலை மாணவி, பாலியல் வன்முறை வழக்கில் கைதான முக்கிய குற்றவாளியான ஞானசேகரன், மதுராந்தகம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், ஆள்கடத்தல் வழக்கு தொடர்பாக நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகேயுள்ள பாக்கம் கிராமத்தில், 2018ல், அரவிந்த் செராமிக்ஸ் என்ற கடையின் உரிமையாளர் பாலசந்தரை, 62, கடத்தி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில், ஞானசேகரனை கைது செய்த மதுராந்தகம் போலீசார், அவர் மீது வழக்கும் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு சம்பந்தமாக, மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஞானசேகரை, போலீசார் பலத்த பாதுகாப்புடன் நேற்று ஆஜர் படுத்தினர்.
வழக்கை விசாரித்த குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1, நீதிபதி மதுமிதா, மார்ச் 14-ம் தேதி, வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருவதால், அன்றும் நீதிமன்றத்தில் ஞானசேகரனை ஆஜர்படுத்த வேண்டும் என, உத்தரவிட்டார்.