ADDED : மே 27, 2024 06:08 AM

சென்னை : மதுக்கடைகளில் நிர்வாகத்திற்கு தொடர்பில்லாத நபர்கள் பணிபுரிந்தால், சம்பந்தப்பட்ட ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட மேலாளர்களை டாஸ்மாக் அறிவுறுத்திஉள்ளது.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் நடத்தும், 4,820 மதுக்கடைகளில், 25,000 பேர் தொகுப்பூதியத்தில் பணிபுரிகின்றனர்.
சில ஊழியர்கள், வேலைக்கு ஒழுங்காக வராமல், வேறு வேலைகளை கவனிப்பதாகவும், தங்கள் சார்பில், நண்பர்கள், உறவினர்களை கடையில் நியமித்து இருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இந்த முறைகேடு, சென்னை உட்பட பல மாவட்டங்களில் நடக்கிறது.
மதுக்கடைகளில், மது பாட்டிலுக்கு அரசு நிர்ணயித்துள்ள விலையை விட கூடுதலாக, 30 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.
அந்த பணத்தில் இருந்து, தங்களின் பணியை செய்யும் வெளிநபர்களுக்கு தினமும், 500 ரூபாய் முதல் 1,000 ரூபாய் சம்பளம் தருவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஒருவர் கூறியதாவது:
கடைகளில் ஆய்வு மேற்கொண்டு, நிர்வாகத்திற்கு தொடர்பு இல்லாத நபர்கள் பணிபுரிந்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படியும், வெளி நபரை நியமித்த ஊழியர்கள் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்குமாறும், அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.
தவறு கண்டறியும் பட்சத்தில், ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஒவ்வொரு மதுக்கடையிலும் தினமும் சராசரியாக, 2.50 லட்சம் ரூபாய் - 3 லட்சம் ரூபாய் வரை மதுபானங்கள் விற்பனையாகின்றன. இது, விடுமுறை நாட்களில் அதிகரிக்கிறது.

