sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சிறையில் நடிகர் ஜாலி; 9 அதிகாரி பதவி காலி ராஜ உபசார சர்ச்சையால் கர்நாடகாவில் அதிரடி

/

சிறையில் நடிகர் ஜாலி; 9 அதிகாரி பதவி காலி ராஜ உபசார சர்ச்சையால் கர்நாடகாவில் அதிரடி

சிறையில் நடிகர் ஜாலி; 9 அதிகாரி பதவி காலி ராஜ உபசார சர்ச்சையால் கர்நாடகாவில் அதிரடி

சிறையில் நடிகர் ஜாலி; 9 அதிகாரி பதவி காலி ராஜ உபசார சர்ச்சையால் கர்நாடகாவில் அதிரடி

5


ADDED : ஆக 27, 2024 06:33 AM

Google News

ADDED : ஆக 27, 2024 06:33 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பெங்களூரு சிறையில் நடிகர் தர்ஷனுக்கு ராஜ உபசாரம் செய்த சிறை சூப்பிரண்டுகள் உட்பட ஒன்பது பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். தர்ஷனை பெலகாவி ஹிண்டல்கா சிறைக்கு மாற்றவும் கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., அரசு நடக்கிறது. தன் தோழி பவித்ராவுக்கு ஆபாச குறுந்தகவல்கள் அனுப்பிய சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி, 33, என்ற ரசிகரை கொலை செய்த வழக்கில் கைதான பிரபல நடிகர் தர்ஷன், 47, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில், 65 நாட்களுக்கும் மேலாக அடைக்கப்பட்டு உள்ளார்.

அதிர்ச்சி

இவர், அதே சிறையில் இருக்கும் பிரபல ரவுடிகள் வில்சன் கார்டன் நாகா, குல்லா சீனா ஆகியோருடன், ஒரு கையில் டீ கப், இன்னொரு கையில் சிகரெட்டுடன் திறந்தவெளியில் நாற்காலியில் அமர்ந்து பேசும் புகைப்படம் நேற்று முன்தினம் வெளியானது.

தொடர்ந்து, சிறையில் இருந்தபடியே ஒருவருடன் வீடியோ காலில் தர்ஷன் பேசும் காட்சிகளும் வெளியாகி, அதிர்ச்சியை அளித்தன.

இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, முதல்வர் சித்தராமையாவை, கர்நாடக போலீஸ் டி.ஜி.பி., அலோக் மோகன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அன்று இரவு உள்துறை அமைச்சர் பரமேஸ்வரை, பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தாவும் சந்தித்து பேசினார்.

இந்நிலையில், பரப்பன அக்ரஹாரா சிறையில் அமைச்சர் பரமேஸ்வர் நேற்று காலை ஆய்வு நடத்தினார்.

பின், அவர் அளித்த பேட்டி:

தர்ஷனுக்கு சிறையில் ராஜ உபசாரம் கிடைப்பது தொடர்பான புகைப்படங்கள் என் கவனத்திற்கு வந்ததும், சிறை துறை டி.ஜி.பி., மாலினி கிருஷ்ணமூர்த்தியிடம் ஆலோசனை நடத்தினேன்.

தர்ஷனுக்கு உதவிய சிறை சூப்பிரண்டுகள் கேசவமூர்த்தி, மல்லிகார்ஜுன் சாமி, தலைமை வார்டன்கள் வெங்கடப்பா, சம்பத்குமார், வார்டன் பசப்பா, ஜெயிலர்கள் சரணபசவா, பிரபு, உதவி ஜெயிலர்கள் திப்பேசாமி, ஸ்ரீகாந்த் ஆகிய ஒன்பது பேரை, 'சஸ்பெண்ட்' செய்துஉள்ளோம்.

தர்ஷனுக்கு ராஜ உபசாரம் கிடைத்தது பற்றி விரிவான அறிக்கை கேட்டுள்ளேன். இதில், எவ்வளவு பெரிய அதிகாரிகள் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜாமர் கருவி

சிறையில், 24 மணி நேரமும் கண்காணிப்பு உள்ளது. அதையும் மீறி தர்ஷன், மேலும் சிலர் வட்டமாக அமர்ந்து டீ குடித்து உள்ளனர். எங்கு தவறு நடந்துள்ளது என்று பார்ப்போம்.

சிறையில் இருந்தபடி தர்ஷன் ஒருவருடன் வீடியோ காலில் பேசியுள்ளார். சிறைக்குள் மொபைல் போன் எப்படி வந்தது என்பது குறித்தும் விசாரிக்கப்படும்.

சிறையின் பாதுகாப்புக்காக ஜாமர் கருவி பொருத்தப்பட்டிருந்தது. ஜாமர் மூலம் தங்களுக்கு தொந்தரவு ஏற்படுவதாக, சிறையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால், ஜாமரின் வீரியம் குறைக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

பெலகாவியில் நேற்று முதல்வர் சித்தராமையா கூறுகையில், “சிறையில் தர்ஷனுக்கு சகல வசதிகள் செய்து கொடுத்த சூப்பிரண்டுகள் உட்பட ஒன்பது பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

“மேலும் சிலர் மீது நடவடிக்கை எடுக்க உள்ளோம். தர்ஷனை வேறு சிறைக்கு மாற்றுவது குறித்து ஆலோசித்து வருகிறோம்,” என்றார்.

அசைவ உணவு

தர்ஷனுக்கு ராஜ உபசாரம் செய்து கொடுத்ததில், ரவுடி வில்சன் கார்டன் நாகாவின் பங்கு அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது.

சிறை ஊழியர்களுடன் நல்ல தொடர்பில் இருந்த அவர், பணம் கொடுத்து தர்ஷனுக்கு தேவையானதை வாங்கி கொடுத்ததும் தெரிந்துள்ளது.

பனசங்கரியில் உள்ள பிரபல அசைவ ஹோட்டலில் இருந்து, தர்ஷனுக்கு அசைவ உணவுகள் வாங்கி கொடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், தர்ஷனை பெங்களூரில் இருந்து பெலகாவியின் ஹிண்டல்கா சிறைக்கு மாற்றவும் காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது. இன்று அவர் ஹிண்டல்கா சிறைக்கு மாற்றப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.

தர்ஷனுக்கு சிறையில் ராஜ உபசாரம் கிடைத்தது தொடர்பாக, அதிகாரி சோமசேகர் அளித்த புகாரின்படி, பரப்பன அக்ரஹாரா போலீஸ் நிலையத்தில், மூன்று வழக்குகள் பதிவாகி உள்ளன. மூன்று வழக்கிலும் தர்ஷன் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

'வீடியோ கால்' ரவுடி கைது

சிறையில் இருக்கும் தர்ஷன் மொபைல் போனில் ஒருவருடன் வீடியோ காலில் பேசும் காட்சிகள் நேற்று முன்தினம் வெளியாகின. வீடியோ காலில் பேசியது யார் என்று விசாரித்த போது, பேடரஹள்ளி ரவுடி சத்யா என்பது தெரிந்தது. அவர், நேற்று கைது செய்யப்பட்டார்.



நீதி விசாரணை வேண்டும்

என் மகனை கொலை செய்த நடிகர் தர்ஷன் சிறையில் உள்ளாரா அல்லது ரிசார்ட்டில் உள்ளாரா என்று எனக்கு சந்தேகம் எழுந்துள்ளது. முதலில் அரசு மீதும், காவல்துறை மீதும் எனக்கு நம்பிக்கை இருந்தது. இப்போது நீதி கிடைக்குமா என்று எனக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கைதிகளுக்கு இடையில் பணக்காரர், ஏழை என்ற பாகுபாடு பார்க்க கூடாது. என் மகன் கொலை குறித்து நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த அரசு உத்தரவிட வேண்டும்.- காசிநாத்ரேணுகாசாமியின் தந்தை








      Dinamalar
      Follow us