ஒரே நாளில் 2 குட்நியூஸ்... ஸ்வீட் எடு... கொண்டாடு...! குஷியில் த.வெ.க., தொண்டர்கள்!
ஒரே நாளில் 2 குட்நியூஸ்... ஸ்வீட் எடு... கொண்டாடு...! குஷியில் த.வெ.க., தொண்டர்கள்!
ADDED : செப் 08, 2024 11:31 AM

சென்னை: தமிழக வெற்றிக்கழகத்தை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் பதிவு செய்துள்ள நிலையில் முதல் மாநாட்டுக்காக அனுமதியையும் தமிழக போலீசார் வழங்கி உள்ளது, அக்கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.
ஸ்டார் நடிகர்கள்
வருவார் என்று எதிர்பார்த்த உச்ச நடிகர்கள் பலர் அரசியலுக்கு வரவில்லை. வந்த சில நடிகர்களும் கட்சியை கலைத்துவிட்டு தேசிய கட்சியிலும் அல்லது கட்சியையே கண்டு கொள்ளாமலும் இருப்பது தெரிந்த ஒன்று.
உதயமானது த.வெ.க.
அதற்கு விதிவிலக்காக அரசியலுக்கு வருவேன், தேர்தலில் களம் காண்பேன் என்று அறிவித்து கட்சியை ஆரம்பித்தவர் நடிகர் விஜய். தமது கட்சிக்கு தமிழக வெற்றிக்கழகம் என்று பெயர் வைத்தார். 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை இலக்காக கொண்டு கட்சி செயல்படும் என்று கூறி ரசிகர்களையும், தமது ஆதரவாளர்களையும் உற்சாகப்படுத்தினார்.
மாநாட்டு ஏற்பாடுகள்
கட்சியின் மாநாடு விக்கிரவாண்டியில் நடத்த திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் கவனித்து வருகிறார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சாலையில் மாநாட்டை நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டு காவல்துறை அனுமதி வேண்டி முறைப்படி விண்ணப்பமும் அளிக்கப்பட்டது.
கேள்விகளும், பதில்களும்
கடந்த 28ம் தேதி மனு அளித்துள்ள நிலையில் காவல்துறை அனுமதிக்காக பல நெருக்கடிகளை த.வெ.க., சந்தித்ததாக கூறப்படுகிறது. மொத்தம் 21 கேள்விகளை கேட்டு அதற்கான பதில்களையும் காவல்துறை தரப்பில் கேட்கப்பட்டது. மாநாட்டுக்கு ஒரு புறம் இடைஞ்சல் தரவே இப்படி கேட்கப்படுவதாக கூறப்பட்டாலும் முறைப்படி உரிய விளக்கத்தையும் அளித்து விட்டதாகவும், மாநாடு நிச்சயம் நடைபெறும் என்றும் புஸ்சி ஆனந்த் அறிவித்திருந்தார்.
மாநாடு அனுமதி
அவரின் அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் தெம்பை ஏற்படுத்தி இருந்தாலும், முறையான அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் த.வெ.க.,வை அங்கீகரித்துள்ளது. அதே நேரத்தில் கட்சி மாநாட்டுக்கு அதிகாரப்பூர்வ அனுமதியையும் போலீசார் வழங்கி உள்ளனர். ஒரே நாளில் இரண்டு சூப்பர் அறிவிப்புகள் த.வெ.க., முகாமை கொண்டாட வைத்திருக்கிறது.
விஜய் அறிவிப்பு
இந் நிலையில், முக்கிய அறிவிப்பை நடிகர் விஜய் இன்று அறிக்கை மூலமாக வெளியிட்டு உள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறி உள்ளதாவது:
காத்திருந்தோம்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்கிற அடிப்படைக் கோட்பாட்டோடு நாம் அரசியலை அணுகுவதும் ஒருவிதக் கொள்கைக் கொண்டாட்டமே. எனினும் முழுமையான கொண்டாட்டத்திற்காகவும், அரசியல் கட்சிக்கான சட்டப்பூர்வமானப் பதிவுக்காகவுமே நாம் இதுவரை காத்திருந்தோம். இப்போது அதற்கான அனுமதியும் கிடைத்து விட்டது.
அரசியல் கட்சி
தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்காக, பிப். 2ம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தோம். அதைச் சட்டப்பூர்வமாகப் பரிசீலித்த நமது நாட்டின் தேர்தல் ஆணையம், தற்போது நம் தமிழக வெற்றிக் கழகத்தை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்து, தேர்தல் அரசியலில், பதிவுசெய்யப்பட்ட கட்சியாகப் பங்குபெற அனுமதி வழங்கி உள்ளது. இதை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
ஆயத்த பணிகள்
திசைகளை வெல்லப் போவதற்கான முன்னறிவிப்பாக, இப்போது முதற்கதவு நமக்காகத் திறந்திருக்கிறது. இச்சூழலில், நமது கழகத்தின் கொள்கைப் பிரகடன முதல் மாநில மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள்.
வாகை
தடைகளைத் தகர்த்தெறிந்து, கொடி உயர்த்தி, கொள்கை தீபம் ஏந்தி, தமிழக மக்களுக்கானத் தலையாய அரசியல் கட்சியாகத் தமிழ்நாட்டில் வலம் வருவோம். வெற்றிக் கொடியேந்தி மக்களைச் சந்திப்போம்! வாகை சூடுவோம்! இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அரசியல் ரூட் க்ளியர்
ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு அறிவிப்புகள். ஒன்று த.வெ.க.,வை தேர்தல் ஆணையம் பதிவு செய்தது, மற்றொன்று நடிகர் விஜய்யின் அறிக்கை என அவரது ரசிகர்களும், தொண்டர்களும் ஏக மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். இனி எங்களின் அரசியல் ரூட்டில் எவ்வித தடங்கலும் இல்லை என்று கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.