ADDED : ஏப் 15, 2024 12:36 AM

சென்னை: தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு, கூடுதலாக 10 கம்பெனி துணை ராணுவம் தேவை என கேட்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகளுக்கும், விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும், வரும் 19ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. தேர்தல் அமைதியாக நடக்க, அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்து வருகிறது.
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக, 190 கம்பெனி துணை ராணுவம் வந்துள்ளது. இவர்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டு, பாதுகாப்பு பணியில்ஈடுபட்டு உள்ளனர்.
தேர்தல் பாதுகாப்பு பணியில், துணை ராணுவ வீரர்களுடன், போலீசார், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், ஊர்க்காவல் படையினரும் ஈடுபட உள்ளனர்.
இது தவிர, அண்டை மாநிலங்களில் இருந்து, 10,000 போலீசார் வர உள்ளனர். மேலும், 10 கம்பெனி துணை ராணுவத்தை, பாதுகாப்பு பணிக்கு வழங்கும்படி, டி.ஜி.பி., தேர்தல் கமிஷனிடம் கேட்டுள்ளார்.
இது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறுகையில், ''தேர்தல் பாதுகாப்பு பணிக்கு கூடுதலாக, 10 கம்பெனி துணை ராணுவம் தேவை என, தேர்தல் கமிஷனிடம் கேட்கப்பட்டுள்ளது; இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. அனுமதி கிடைத்ததும், அவர்கள் எப்போது தமிழகம் வருவர் என்ற தகவல் தெரிய வரும்,'' என்றார்.

