வெளிச்சந்தை மின்சாரத்திற்கு கூடுதல் 'சர்சார்ஜ்' வசூல்?
வெளிச்சந்தை மின்சாரத்திற்கு கூடுதல் 'சர்சார்ஜ்' வசூல்?
ADDED : செப் 08, 2024 02:00 AM
சென்னை:தமிழகத்தில் உயரழுத்த பிரிவில் இடம் பெறும் பெரிய தொழிற்சாலைகள், மின் வாரியத்திடம் இருந்து மட்டுமின்றி, வெளிச்சந்தையில் மூன்றாம் நபரிடம் இருந்தும் மின்சாரம் வாங்குகின்றன. இந்த மின்சாரத்தை எடுத்து வருவதற்கு, மின் வாரியத்தின் வழித்தடங்களை பயன்படுத்துகின்றன.
இதற்காக, 'கிராஸ் - சப்சிடி சர்சார்ஜ்' கட்டணமாக யூனிட்டிற்கு, 1.92 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
அதனுடன் சேர்த்து, வரும் அக்., 1 முதல், 2025 மார்ச் 31 வரையிலான காலத்தில் வாங்கப்படும் மின்சாரத்திற்கு யூனிட்டுக்கு, 1.06 ரூபாய் கூடுதல் சர்சார்ஜ் கட்டணம் வசூலிக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கேட்கப்பட்டு உள்ளது.
ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கூடுதல் சர்சார்ஜ் விதிக்கும் கட்டண மனு மீதான அறிக்கையை இணையதளத்தில் வெளியிட்டு, மக்களிடம் மின் வாரியம் கருத்து கேட்டுள்ளது.