கல்வராயன் மலைப்பகுதி மேம்பாடு அறிக்கை அளிக்க கூடுதல் அவகாசம்
கல்வராயன் மலைப்பகுதி மேம்பாடு அறிக்கை அளிக்க கூடுதல் அவகாசம்
ADDED : ஆக 03, 2024 12:35 AM
சென்னை:கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கான வசதிகள் குறித்து, ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, தமிழக அரசுக்கு கூடுதல் அவகாசத்தை, சென்னை உயர் நீதிமன்றம் வழங்கி உள்ளது. விசாரணையை, வரும் 21க்கு தள்ளி வைத்துள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், கள்ளச்சாராயம் குடித்து, 66 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து, கல்வராயன் மலைப்பகுதி மக்களின் சமூக - பொருளாதார பிரச்னைக்கு தீர்வு காண அரசை வலியுறுத்தி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், குமரப்பன் அமர்வு தாமாக முன்வந்து, வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு, அரசின் நலத்திட்டங்கள் கிடைக்கின்றனவா; அடிப்படை வசதிகள் கிடைக்கிறதா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
'அந்தப் பகுதி மக்களின் முன்னேற்றத்துக்கு, நலனுக்கு, அரசு தரப்பில் என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை விளக்க வேண்டும். இதுகுறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்று கூறியிருந்தனர்.
அதைத்தொடர்ந்து, அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையை பரிசீலித்த நீதிபதிகள், அதிருப்தி தெரிவித்தனர். அரசுக்கும் பல கேள்விகளை எழுப்பியிருந்தனர்.
இதையடுத்து வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது.
கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு மேற்கொள்ளப்பட்ட வசதிகள் குறித்து, பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் தலைமையில் ஆய்வுகள் முடித்து அறிக்கை அளிக்க, கூடுதல் அவகாசம் வழங்கும்படி, அரசு தரப்பில் கோரப்பட்டது.
அதை ஏற்ற நீதிபதிகள், விசாரணையை, வரும் 21க்கு தள்ளி வைத்தனர்.
கல்வராயன் மலைப்பகுதி வனத்துறையின் கீழ் வருவதால், முதன்மை தலைமை வனப்பாதுகாவலரை பிரதிவாதியாக சேர்த்த நீதிபதிகள், வனத்துறை தரப்பிலும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.