ADDED : மார் 09, 2025 12:45 AM

சென்னை: ''வேலை செய்யும் பெண்களுக்கு போதுமான விடுதிகளை, அதற்கு பொறுப்பானவர்கள் உருவாக்க வேண்டும்,'' என, கவர்னர் ரவி கூறினார்.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி, சென்னை கிண்டியில் உள்ள, கவர்னர் மாளிகையில் நேற்று முன்தினம் நடந்தது.
விருதுகளை வழங்கி கவர்னர் ரவி பேசியதாவது:
பெண்கள் பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டனர், அவர்கள் மீது பாகுபாடு காட்டப்பட்டது. பல நாடுகளில், 20 ஆண்டுகளுக்கு முன் வரை, ஓட்டளிக்க கூட உரிமை இல்லாமல் இருந்தனர்.
குடும்பத்தின் துாண்
குடும்பத்தின் துாணாக இருப்பவர்கள் பெண்கள் தான். மொத்த குடும்பத்தையும் பாதுகாக்கின்றனர். ஒரு நெருக்கடியான சூழலில், பெண் எடுக்கும் முடிவு தான் சிறந்ததாக இருக்கும்.
பெண் கல்வியின் வாயிலாக, பெண்களின் வளர்ச்சி பற்றி பேசுகிறோம். ஆனால், கல்லுாரிகளில் பெண்களுக்கான கழிப்பறைகள் கட்டுவது குறித்து பேசுவதில்லை.
பெண்களுக்கு போதுமான கழிப்பறைகள் இல்லாத போது, அவர்கள் எப்படி படிக்க வருவர். பெண்களின் முன்னேற்றத்தில் உள்ள தடைகளை நீக்க வேண்டும். நாடு வளர்ச்சி அடைய, பெண்கள் பங்கு பெறுவதற்கான சூழலை உருவாக்க வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி வந்த பின், கழிப்பறைகள் கட்ட வேண்டும் என்று கூறியபோது, ஏளனமாக பார்க்கப்பட்டது. நம் நாட்டில், நிறைய பேர் கழிப்பறை இல்லாமல், திறந்த வெளிக்கு சென்றனர்.
பெற்றோர் நம்ப வேண்டும்
அதனால், ஒவ்வொரு வீட்டிற்கும் கழிப்பறை கட்ட வேண்டும் என, பிரதமர் கூறினார். அதுபோல, ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர், சமையல் எரிவாயு இருக்க வேண்டும் என்றார்.
கல்லுாரிகளில் பதக்கம் வென்ற மாணவியருடன் உரையாடிய போது, பெற்றோர் தங்களை கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு அனுப்புவதில்லை. நகரங்கள் பெண்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை என, பெற்றோர் நினைப்பதாகக் கூறினர்.
வேலை செய்யும் பெண்களுக்கு போதுமான விடுதிகளை, இதற்கு பொறுப்பானவர்கள் உருவாக்க வேண்டும்; பெற்றோர்களும் பெண்களை நம்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், முன்னாள் ராணுவ வீரர் முத்துலட்சுமி, நடிகை வடிவுக்கரசி, சமூக செயற்பாட்டாளர் பத்மா வெங்கட்ராமன், டாக்டர் விஜயலட்சுமி, ஆட்டோ டிரைவர் அமலா, ஜெயந்தி உள்ளிட்ட, 30 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.