ADDED : ஏப் 30, 2024 10:44 PM
சென்னை:தமிழக அரசின் எம்.ஜி.ஆர்., திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில், நடப்பு கல்வியாண்டு பட்டப்படிப்பில் சேர, மாணவ, மாணவியரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.
இந்நிறுவனத்தில், பி.ஏ., இளங்கலை காட்சிக்கலை, டிஜிட்டல் இன்டர்மீடியட், ஒலிப்பதிவு, இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல், படத்தொகுப்பு, அனிமேஷன் மற்றும் விஷுவல் எபக்ட்ஸ் என, ஆறு வகை பட்டப்படிப்புகள் உள்ளன. இவற்றில் சேர விரும்புவோர், நாளை முதல் மே 20ம் தேதி வரை, www.tn.gov.in இணையதளத்தில், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, 'முதல்வர், முழு கூடுதல் பொறுப்பு, தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர்., திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம், சி.ஐ.டி., வளாகம், தரமணி, சென்னை - 600113' என்ற முகவரிக்கு, தபால் வாயிலாக, வரும், 27ம் தேதி மாலை 5:00 மணிக்குள் வந்து சேரும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.