அ.தி.மு.க., பிரமுகர் கொலை வழக்கு பண்ருட்டியில் 4 பேர் கைது
அ.தி.மு.க., பிரமுகர் கொலை வழக்கு பண்ருட்டியில் 4 பேர் கைது
ADDED : ஆக 01, 2024 05:53 AM

பாகூர்: பழிக்கு பழியாக அ.தி.மு.க., பிரமுகரை வெட்டி கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்
கடலுார், திருப்பாதிரிப்புலியூர் நவநீதம் நகரை சேர்ந்தவர் பத்மநாபன்,48; அ.தி.மு.க., பிரமுகர். பெயிண்டரான இவர், கடந்த 28ம் தேதி காலை புதுச்சேரி மாநிலம், பாகூர் அடுத்த இருளஞ்சந்தை அருகே பைக்கில் சென்றபோது, காரில் வந்த மர்ம கும்பல் வழமறித்து வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது.
இதுகுறித்து, பாகூர் போலீசார் வழக்கு பதிந்து இன்ஸ்பெக்டர்கள் சஜித் மற்றும் கணேஷ் ஆகியோர் தலைமையில் இரு தனிப்படைகள் அமைத்து விசாரித்து வந்தனர்.
அதில், கடலுாரில் கடந்தாண்டு நடந்த சீமந்தம் நிகழ்ச்சியில் நடனமாடியதில், பத்மநாபன் மகனுக்கும், தானம் நகர் ஆட்டோ டிரைவர் பாஸ்கர் உறவினருக்கும் தகராறு ஏற்பட்டது. அதில், பாஸ்கர் கொலை செய்யப்பட்டார்.
இதற்கு பழிக்கு பழியாக, ஜாமினில் வந்த பத்மநாபனை, கடந்த 28ம் தேதி பாஸ்கரின் சகோதரர் அன்பு,36;உறவினர்கள் அன்பரசன் (எ) அஜய்,24; நேதாஜி,23; வித்யாதரன், 25; உள்ளிட்டோர் கொலை செய்தது தெரிய வந்தது.
அதனையொட்டி, பண்ருட்டியில் பதுங்கியிருந்த அன்பு உள்ளிட்ட 4 பேரையும் தனிப்படை போலீசார் நேற்று கைது செய்து, கொலைக்கு பயன்படுத்திய கார், சம்மட்டி, 2 கத்தி மற்றும் 3 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.
நான்கு பேரையும் புதுச்சேரி ஜெ.எம். 4 கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.