கார் பந்தயத்திற்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க., வழக்கு
கார் பந்தயத்திற்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க., வழக்கு
ADDED : ஆக 11, 2024 01:06 AM
சென்னை: சென்னையில் வரும் 30ம் தேதி முதல் செப்., 1 வரை நடக்க உள்ள, 'பார்முலா - 4' கார் பந்தயத்திற்கு தடை விதிக்கக்கோரி, அ.தி.மு.க., சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னையில் தீவுத்திடலை சுற்றியுள்ள 3.5 கி.மீ., நீள சாலைகளில், 42 கோடி ரூபாய் செலவில், கடந்த ஆண்டு டிச., 9, 10ம் தேதிகளில், பார்முலா - 4 கார் பந்தயம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 'மிக்ஜாம்' புயல் காரணமாக, போட்டி ஒத்தி வைக்கப்பட்டது.
அப்போட்டியை இம்மாதம் 30ம் தேதி முதல் செப்., 1 வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பல்வேறு நிபந்தனைகளுடன் போட்டியை நடத்த அனுமதி வழங்கினர்.
அதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க., வழக்கறிஞர் அணி செயலர் இன்பதுரை, 'கார் பந்தயத்தை சென்னையில் நடத்த அனுமதிக்கக்கூடாது' என, அரசு தலைமை செயலரிடம் மனு அளித்தார். அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட கட்சித் தலைவர்களும், சென்னையில் கார் பந்தயம் நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், சென்னை தீவுத்திடலைச் சுற்றி, கார் பந்தயம் நடத்த தடை விதிக்கக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் அ.தி.மு.க., வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக பட்டியலிடும்படியும், அ.தி.மு.க., கோரிக்கை வைத்து உள்ளது.