அ.தி.மு.க., தி.மு.க., ஊழலால் தமிழகம் வளர்ச்சி பெறவில்லை: மதுரை 'ரோடு ஷோ'வில் அமித் ஷா விமர்சனம்
அ.தி.மு.க., தி.மு.க., ஊழலால் தமிழகம் வளர்ச்சி பெறவில்லை: மதுரை 'ரோடு ஷோ'வில் அமித் ஷா விமர்சனம்
ADDED : ஏப் 13, 2024 07:29 AM

மதுரை: ''அ.தி.மு.க., தி.மு.க., கட்சிகளின் ஊழலால் தமிழகம் போதிய வளர்ச்சி பெறவில்லை,'' என்று மதுரை தொகுதி பா.ஜ., வேட்பாளர் ராம ஸ்ரீநிவாசனை ஆதரித்து நடத்திய ரோடு ஷோ நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.
அவர் பேசியதாவது: அ.தி.மு.க., -- தி.மு.க., இரு கூட்டணியையும் விட்டுவிட்டு தமிழகம், புதுவையில், 40 தொகுதி களிலும் போட்டியிடுகிறோம். அ.தி.மு.க., - தி.மு.க., ஊழல் காரணமாக தமிழகம் அந்தளவு வளர்ச்சி பெறவில்லை. பிரதமர் மோடி தேசத்தின் பாதுகாப்பு, வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ளார். இப்போது அதற்கான சமயம் வந்துவிட்டது. தமிழக மக்களும் மோடியின் கையைப்பிடித்து அவருக்கு ஓட்டளிக்க தயாராகி விட்டீர்கள்.
பா.ஜ., மட்டும் தான் தமிழ் வளர்ச்சி, தமிழக வளர்ச்சியில் அக்கறை செலுத்தும். தமிழகத்தின் கவுரவத்தை பாரதத்தில் மட்டுமல்ல; உலகம் முழுதும் பறைசாற்றிக் கொண்டிருப்பவர் மோடி. நான் முதலில் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்னால் உங்களிடம் தமிழில் பேச முடியவில்லையே என்ற வருத்தம் உள்ளது. ஆனாலும், அடுத்த தேர்தலில் நான் உங்களிடம் தமிழில் பேசுவேன் என, உறுதி கூறுகிறேன். நீங்கள் சொல்லுங்கள், 'தாமரைக்கு ஓட்டளிப்பீர்களா... 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறச் செய்வீர்களா...' இவ்வாறு அவர் பேசினார்.
ஸ்பைடர் மேன் பட்டபாடு
மதுரையில் ரோடு ஷோ நடத்த விமானத்தில் மாலை, 4:30 மணிக்கு மதுரை வந்தார் அமித்ஷா. அங்கிருந்து புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கோட்டை பைரவர் கோவிலுக்கு செல்வதாக இருந்தது. மழை காரணமாக அந்த திட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து ரிங்ரோட்டில் உள்ள ஹோட்டலில் கட்சி நிர்வாகிகளை சந்தித்தார்.
மதுரையில் ரோடு ஷோ நடத்த ஏற்பாடு செய்திருந்த நேதாஜி ரோடு பகுதிக்கு மாலை 6:42 மணிக்கு வந்தார். 6:44க்கு வேனில் வேட்பாளர் ராம ஸ்ரீநிவாசன் மற்றும் நிர்வாகிகளுடன் தாமரை சின்னத்தை அசைத்தவாறு ஓட்டுக்கேட்டார். ரோட்டின் இருபுறமும் ஏராளமான தொண்டர்கள் அவரை மலர் துாவியும், தாமரை சின்னத்தை அசைத்தவாறும் வரவேற்றனர். பார்வையாளர் பகுதியில் ஒரு இளைஞர் 'ஸ்பைடர் மேன்' முகமூடியுடன் நின்றிருந்தார். அவரிடம் சென்ற போலீசார் முகமூடியை கழற்றும்படி கூறி அவரை போட்டோ எடுத்தனர். அவரை பற்றிய விவரங்களை துல்லியமாக விசாரித்தனர்.
அந்த இளைஞர் வடமாநிலங்களில் இப்படி வரவேற்பு கொடுப்பது சகஜம். அதையே தானும் செய்ததாக கூறினார். போலீசார் அவரை எச்சரித்து அனுப்பினர். தெற்காவணி மூலவீதியில் மதுரை ஆதின மடத்தின் முன்பாக ஆதினம் மாலை, சால்வையுடன் நின்றிருந்தார். அவரை கையசைத்து வரும்படி அமித்ஷா அழைத்தார். வேன் அருகே சென்ற ஆதினம் மாலையை கொடுக்க, அதை வாங்கிய அமித்ஷா வேட்பாளர் ராம ஸ்ரீநிவாசன் கழுத்தில் அணிவித்தார்.
ஆதினம் கொடுத்த சால்வையை பெற்றுக் கொண்டார். அங்கிருந்து விளக்குத்துாண் பகுதிக்கு இரவு 7:22க்கு சென்று சேர்ந்தார். அங்கு 8 நிமிடங்கள் ஹிந்தியில் பேசினார். அவரது பேச்சை தமிழில் மொழி பெயர்த்தனர். இரவு, 7:33 மணிக்கு விமான நிலையத்திற்கு சென்று, திருவனந்தபுரம் புறப்பட்டார்.

