அ.தி.மு.க., கூண்டோடு வெளியேற்றம் கூட்டத்தொடர் முழுதும் 'சஸ்பெண்ட்'
அ.தி.மு.க., கூண்டோடு வெளியேற்றம் கூட்டத்தொடர் முழுதும் 'சஸ்பெண்ட்'
ADDED : ஜூன் 27, 2024 01:47 AM

சென்னை:சட்டசபையில் இருந்து, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் நேற்று வெளியேற்றப்பட்டனர். கூட்டத்தொடர் முழுதும் அவர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவதாக, சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
சட்டசபையில் நேற்று காலை துவங்கியதும், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேச அனுமதி கோரினார்.
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எழுந்து நின்றனர். அப்போது சபாநாயகர், “கேள்வி நேரம் முடிந்த பின், பேச வாய்ப்பு தருகிறேன். சபை கூடுவதற்கு, ஒரு மணி நேரம் அல்லது அரை மணி நேரத்திற்கு முன்பாக, ஒத்தி வைப்பு தீர்மானம் கொடுக்க வேண்டும். அதன்படி தீர்மானம் தந்துள்ளீர்கள். இதே பிரச்னைக்கு, முதல்வர் தெளிவாக பதில் அளித்துள்ளார்,” என்றார்.
அவர் கூறியதை ஏற்க மறுத்து, அ.தி.மு.க.,வினர் அனைவரும் சபாநாயகர் இருக்கை முன் சென்று கோஷமிட்டனர்.
சபாநாயகர் மீண்டும் அவர்களை நோக்கி, “உங்களுக்கு விவாதத்தில் பங்கேற்க விருப்பம் இல்லை. தொடர்ந்து சட்டசபையை நடத்த விடாமல் செய்கிறீர்கள். அனைவரும் இருக்கையில் அமருங்கள். விதிப்படி அனுமதி அளிப்பதா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டும். நான் பேசுவதை கேட்டு முடிவு எடுங்கள். நான் பேசிய பிறகுதான், உங்களை அனுமதிக்க முடியும்,” என்றார்.
அதை அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஏற்காததால், அவர்களை சபையில் இருந்து வெளியேற்றும்படி, சபை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து, தரையில் அமர்ந்த அ.தி.மு.க., துணை கொறடா ரவியை, காவலர்கள் குண்டு கட்டாக துாக்கி சென்றனர். அவர் தன் கையில் இருந்த காகிதத்தை கிழித்தெறிந்தபடி சென்றார். மற்றவர்களையும் காவலர்கள் வெளியேற்றினர்.
அதன்பின் நடந்த விவாதம்:
சபாநாயகர்: எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, சட்டசபை ஆரம்பித்த நாள் முதல், கள்ளக்குறிச்சி மரணம் குறித்து விவாதிக்க வேண்டும் என்றார். அவர் கட்சியை சேர்ந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்திருந்தார்.
கேள்வி நேரம் முடிந்து, அவரை பேச அனுமதிப்பதாக கூறி இருந்தோம். ஆனால், அவர்கள் கலகம் ஏற்படுத்தி, சபையில் வெளியேற வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டனர்.
அவர்கள் வெளிநடப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டனர். சட்டசபையில் தொடர்ந்து இவ்வாறு செய்வது நியாயம் அல்ல.
அமைச்சர் துரைமுருகன்: நாட்டில் நடக்கும் ஒரு விஷயத்தை, சட்டசபையில் பேச எதிர்க்கட்சிக்கு உரிமை உண்டு. ஆனால், சபைக்கு வந்து, எதற்காக கருப்பு சட்டை அணிந்தனரோ, அதற்கான காரணத்தை பேசுவதில்லை.
இங்கு பேசாமல், பத்திரிகையாளர்களிடம் பேசிவிட்டு வீட்டுக்கு செல்கின்றனர். தொடர்ந்து இந்த செயலை செய்கின்றனர்.
அவர்கள் கள்ளக்குறிச்சி குறித்து பேசுவதாக இருந்தால், தைரியமாக இருந்து பேசியிருக்க வேண்டும். அவர்கள் பேசியிருந்தால், அவர்கள் ஆட்சியில் நடந்ததை, முதல்வர் 'கிழிகிழி'வென கிழித்திருப்பார். அதற்கு பயந்து தான் உள்ளே வருவது, வெளியில் செல்வது என உள்ளனர்.
எதிர்பார்க்காத சில நிகழ்ச்சிகள் நடப்பதுண்டு. நடக்கக் கூடாதது நடந்து விட்டது. அதற்கு வேண்டிய பரிகாரத்தை முதல்வர் செய்துள்ளார். இதைவிட ஒரு அரசு என்ன செய்யும்? இதை விளக்கமாக சொல்வோம். அவர்கள் ஆட்சியில் நடந்ததை கூறுவோம் என்பதால், ஒரு மலிவான விளம்பரத்தை தேடுகின்றனர்.
இந்நிலை நீடிக்கக் கூடாது. சபைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதால், சபை நடவடிக்கைகளை தடுத்த அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை தற்காலிக நீக்கம் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிகிறேன்.
இத்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
அதைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர், “வெளியேற்றப்பட்ட அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், இந்த தொடர் முழுதும் சபை நடவடிக்கையில் பங்கேற்க கூடாது,” என உத்தரவிட்டார்.