ADDED : மார் 31, 2024 12:25 AM

'கோவை, சேலம் மாவட்ட கலெக்டர்கள், நீலகிரி -மாவட்ட வருவாய் அலுவலர், எஸ்.பி., ஆகியோரை இடமாற்றம் செய்ய வேண்டும்' என, அ.தி.மு.க., சார்பில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது.
அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு செயலர் இன்பதுரை அளித்துள்ள மனு:
சேலம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் செல்வகணபதி, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு -- 17க்கு எதிராக, இரண்டு ஓட்டுரிமையை பெற்றுள்ளார். இதுகுறித்து, மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தும், அவரது வேட்பு மனு சட்ட விரோதமாக ஏற்கப்பட்டுள்ளது. வேட்பு மனுவில், தண்டனை பெற்ற வழக்குகள் குறித்த விபரங்களையும் மறைத்துள்ளார்.
எனவே, அவரது வேட்பு மனுவை நிராகரிக்க கோரினோம்; தேர்தல் அதிகாரி ஏற்காமல் இயந்திரத்தனமாக செயல்பட்டுள்ளார். செல்வகணபதிக்கு ஆதரவாக செயல்பட்ட, சேலம் தொகுதி தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும்
கோவை பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலை, தன் வேட்பு மனுவை நீதித்துறை பயன்பாட்டிற்கு அல்லாத முத்திரைத்தாளில் தாக்கல் செய்வதற்கு பதிலாக, நீதிமன்ற கட்டண முத்திரைத்தாளில் தாக்கல் செய்துள்ளார்
இந்த வேட்பு மனு செல்லாததாகிறது என சுட்டிக்காட்டியும், தேர்தல் அதிகாரி அவரது வேட்பு மனுவை ஏற்றுள்ளார்
அண்ணாமலை இரு வேட்பு மனுக்களை தாக்கல் செய்ததாக, மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்தார். அப்படி தாக்கல் செய்யப்பட்டிருந்தால், அந்த வேட்பு மனுவை அன்றே பதிவேற்றி இருக்க வேண்டும்; அவ்வாறு செய்யவில்லை. எனவே, மாவட்ட தேர்தல் அலுவலர், பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட்டு உள்ளதால், அவரை மாற்ற வேண்டும்
நீலகிரியில் மனுத்தாக்கல் செய்ய வந்த அ.தி.மு.க.,வினர் மீது தடியடி நடத்தியதோடு, அவர்கள் மீது ஜாமினில் வெளி வர முடியாதபடி வழக்குப் பதிவு செய்த, எஸ்.பி., சுந்தரவடிவேலை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.
அம்மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, 2020 ஜூலை முதல் பணியாற்றி வருகிறார். எனவே, அவரை தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி உடனடியாக மாற்ற வேண்டும்
தமிழக செய்தித்துறை அதிகாரிகள் சிலர் பத்திரிகைகளுக்கும், ஊடகங்களுக்கும், முதல்வர், அமைச்சர் உதயநிதி தேர்தல் பிரசார செய்திகளை அனுப்பி வருகின்றனர். இதுகுறித்து விசாரித்து தவறிழைத்த செய்தித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

