ADDED : மே 09, 2024 11:27 PM
கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் சுல்தான் செய்யது இப்ராஹிம் பாதுஷா நாயகம் தர்கா சந்தனக்கூடு விழா நேற்று மாலை துவங்கியது.
தர்காவில் 850ம் ஆண்டு சந்தனக்கூடு விழா துவக்க நிகழ்ச்சியில் நேற்று மாலை 6:30 மணிக்கு ஏராளமானோர் மவுலீது (புகழ் மாலை) ஓதினர். தினமும் ஷரீப் தர்கா மண்டபத்தில் ஏர்வாடி ஹக்தார்களால் 23 நாட்கள் மவுலீது ஓதப்படும். மே 18 ல் தர்கா வளாகம் முன்புறமுள்ள கொடிபீடம் அமைந்துள்ள இடத்தில் அடிமரம் ஊன்றப்படும்.
மறுநாள் மே 19 ல் பாதுஷா நாயகத்தின் பச்சை வண்ண கொடி யானை மீது ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு தர்கா முன்புறமுள்ள கொடி மரத்தில் கொடியேற்றம் நடக்கிறது.
மே 31 மாலை துவங்கி ஜூன் 1 அதிகாலை வரை மவுலீது ஓதப்பட்டு அலங்கரிக்கப்பட்ட மின்னொளி அலங்காரத்தில் சந்தனக்கூடு ஊர்வலம் வந்தவுடன் புனித மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சியுடன் மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா நடக்கிறது.
குதிரைகள் நடனமாடியபடி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான யாத்திரீகர்கள், பொதுமக்கள் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபையினர் மற்றும் உறுப்பினர்கள் செய்துவருகின்றனர்.